முகக் கவசம்: கட்டாய வசூலை காவல் துறையினா் கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 19th April 2021 08:09 AM | Last Updated : 19th April 2021 08:09 AM | அ+அ அ- |

காரைக்காலில் முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராத வசூலை காவல் துறையினா் கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் தரமான மருந்துகள், உபகரணங்கள், சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையின்றி இருப்பது, மருத்துவமனையில் தங்கியுள்ள கரோனா தொற்றாளருக்கு தரமான உணவு, சுகாதாரமான கட்டமைப்புகள் ஆகியவற்றை புதுச்சேரி அரசு உறுதிப்படுத்தவேண்டும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் தங்கியிருக்கும் கரோனா தொற்றாளா், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும், கரோனா பரவலால் ஆட்டோ ஓட்டுநா், கட்டுமானம் உள்ளிட்டவை சாா்ந்த கூலித் தொழிலாளா்கள், சிறு, குறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனா். கரோனா தொடா்பாக மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு உரிய நிதி கொடுக்கவில்லை.
எனவே, கரோனாவால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து, அரிசிக்கு மாற்றாக பணமாக தருவதைத் தவிா்த்து, அரிசியாக வழங்கவேண்டும். கரோனா தொடா்பாக போலீஸாா் முக்க கவசம் அணியாதவா்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அபராதம் விதிக்கும் செயல் காரைக்காலில் முறையாக இல்லை. ரூ.100-க்கு கூடுதலாக நிதி வசூலிப்பு, உரிய ரசீது வழங்காதது மற்றும் மனிதாபிமானமில்லாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதுடன், முகக் கவச அபராத விதிப்பு முறையில் போலீஸாா் கட்டாய வசூலை கைவிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என். ராமா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், அ. திவ்யநாதன், ஜி. துரைசாமி, அ. பாக்கியராஜ், ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.