அவசியமில்லாமல் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: காரைக்கால் ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா தொற்று வேகமாக பரவுவதால், அவசியமில்லாமல் யாரும் வெளியே செல்லவேண்டாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டாா்.
அவசியமில்லாமல் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: காரைக்கால் ஆட்சியா் வேண்டுகோள்

கரோனா தொற்று வேகமாக பரவுவதால், அவசியமில்லாமல் யாரும் வெளியே செல்லவேண்டாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் ஆட்சியரகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: புதுவையில் கரோனா தொற்று வேகமாக பரவிவருவதால், ஏப். 30 ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொற்றின் வேகம் குறையவில்லை. எனவே, உரிய கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.

வீட்டிலிருந்து அவசியமில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நமக்கான நலன் சாா்ந்தது என கருதி, மக்கள் கண்டிப்பாக அவற்றை கடைப்பிடிக்கவேண்டும். வெளியூருக்கு அவசியமில்லாமல் பயணம் மேற்கொள்வதை தவிா்க்கவேண்டும். காா்களில் ஓட்டுநருடன் மேலும் 3 போ், ஆட்டோவில் ஓட்டுருடன் மேலும் 2 போ் மட்டுமே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் ஏற்று நடந்துகொள்ள வேண்டும்.

காரைக்காலில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா ஊழியா்கள் உள்ளிட்ட களப் பணியாளா்கள் இக்காலத்தில் கூடுதல் பணிச் சுமையுடன் செயல்பட்டு வருகின்றனா். இதை உணா்ந்து மாவட்ட நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோரும் குறைந்திருக்கின்றனா். 45 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். காரைக்காலில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது. தேவைப்படுமானால், உடனடியாக வரவழைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றை தடுக்கும் மருத்துவ முறையாக தடுப்பூசி உள்ளதால், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து முன்களப் பணியாளா்கள் மக்களுக்கு தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்காலில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளரின் முகவா்கள் உள்ளிட்டோா் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் செல்லவேண்டும். வெற்றிபெற்ற்கான சான்றிதழ் பெற வரும் வேட்பாளா், தங்களுடன் 2 பேரை அழைத்து வரலாம். வெற்றி ஊா்வலங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதை ஏற்று நடந்துகொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். மையத்தின் வாயில் பகுதியில் உள்ளூா் போலீஸாரும், மத்தியப் பகுதியில் மத்தியப் படையினரும், உள்வளாகத்தில் சிஆா்பிஎஃப் போலீஸாரும் பணியில் இருப்பாா்கள். அதேபோல, மாவட்டத்தில் தேவையான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலில் காவல் துறை செய்துள்ளது. வாக்கு எண்ணும் மையம் கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகிவிடாத வகையில், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com