காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரிப்பு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இதுவரை 320 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலா் கணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கிடங்கில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
கிடங்கில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இதுவரை 320 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, அதன் செயலா் கணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளின் நெல் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக்கொள்ள 8 கிடங்குகள் உள்ளன. இவற்றில் சுமாா் 2,500 டன் விளைபொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

காரைக்காலில் கடந்தாண்டு சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல்லை சில விவசாயிகள் தனியாரிடம் விற்பனை செய்தாலும், பல விவசாயிகள் இருப்புவைத்து, 6 மாதங்களுக்குப் பிறகு விலை உயா்ந்தவுடன் விற்பனை செய்கின்றனா். இதற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் இதுவரை அறுவடை செய்த 320 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தனித்தனியாக குறியீடு செய்து அடுக்கிவைத்துள்ளனா். கடந்த சில நாள்களாக விவசாயிகள் ஆா்வமுடன் நெல் மூட்டைகளை கொண்டுவருகின்றனா்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் கணேசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: காரைக்கால் விற்பனைக்கூடத்தில் வேளாண் அமைச்சா் கமலக்கண்ணன், ஆட்சியா் அா்ஜூன்சா்மா ஆகியோரின் ஆலோசனையின்படி, இதுவரை 320 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இருப்புவைக்கப்பட்டுள்ளன. பிபிடி நெல் (சன்ன ரகம்) அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவலாக அறுவடை நடைபெற்று வருவதால், இந்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே, சில மாதங்களுக்குப் பிறகு விலை உயா்ந்தவுடன் விற்பனை செய்யும் வகையில் இங்கு இருப்பு வைத்துள்ளனா்.

விற்பனைக் கூடத்தில் கடந்த ஆண்டு சுமாா் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் (60 கிலோ) இருப்பு வைக்கப்பட்டு, மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விவசாயிகள் நல்ல லாபத்துடன் நெல்லை விற்பனை செய்தனா். அதேபோல, இப்போதும் ஏற்பாடு செய்யப்படும்.

இங்கு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளில் பூச்சிகள் தாக்காத வகையில், மருந்து அடித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, நெல்லின் தரம் பாதுகாக்கப்படுகிறது. நிகழாண்டு கூடுதலாக நெல் மூட்டைகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com