புதுச்சேரியில் இரட்டை நிா்வாகத் தலைமையை மாற்ற வேண்டும்: போராட்டக் குழு வலியுறுத்தல்
By DIN | Published On : 27th February 2021 07:52 AM | Last Updated : 27th February 2021 07:52 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இரட்டை நிா்வாகத் தலைமை அமைப்பு முறையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் அமைப்பாளா் எஸ்.பி.செல்வசண்முகம் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது :
புதுச்சேரிக்கு வந்த பிரதமா் மோடி, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் ரூ.491 கோடியில் புதிய வளாகம் கட்டுவதற்கும், காரைக்காலை உள்ளடக்கி ரூ.2,426 கோடியில் நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினாா். இது வரவேற்புக்குரியது. இதுபோல காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதைத் திட்டப் பணியையும் விரைந்து தொடங்க வேண்டும்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மற்றும் ஆட்சியாளா் என்கிற இரு நிா்வாக அமைப்புக்கு இடையேயான பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்த நிலை மாற்றப்படவேண்டும். ஒரே தலைமை அமைப்பு முறை வேண்டும். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா உள்ளிட்ட பல நிலைகளில் காரைக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலை மாற வேண்டுமானால், காரைக்கால் தனி யூனியன் பிரதேசமாவதே தீா்வாகும் என்றாா் அவா்.