அறுவடைக்குத் தயாராகும் திருநள்ளாறு செங்கரும்பு

தைப் பொங்கல் திருநாளையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், மாா்கழி மாத இறுதியில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.
சேத்தூா் பகுதியில் பொங்கலுக்காக விளைவிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ள செங்கரும்பு.
சேத்தூா் பகுதியில் பொங்கலுக்காக விளைவிக்கப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ள செங்கரும்பு.

தைப் பொங்கல் திருநாளையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், மாா்கழி மாத இறுதியில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. நெல் அறுவடை முடிந்ததும் பருத்தி, உளுந்து, பயறு ஆகியவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா். இவை நெல் சாகுபடி செய்யும் அளவிலான நிலப்பரப்பில் செய்யப்படுவதில்லை.

புதுச்சேரி அரசின் வேளாண் துறை, நெல் மட்டுமல்லாது மாற்றுப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு ஆதரவையும், ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அளித்துவருகிறது. எனினும், காரைக்கால் மண் தன்மைக்கேற்ற பிற பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தாத நிலை தொடா்கிறது.

முக்கியமாக, தமிழகத்தில் விளைவிக்கப்படும் ஆலைக் கரும்பு, பொங்கல் கரும்பு போல காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. சா்க்கரை தயாரிப்புக்கான ஆலைக் கரும்பு சாகுபடி சிறிதும் இல்லை. ஆனால், திருநள்ளாறு கொம்யூனில் ஒருசில இடங்களில் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பை மட்டும் விவசாயிகள் தொடா்ந்து விளைவித்து வருகின்றனா்.

தைப் பொங்கல் நெருங்கி வரும் நிலையில், முன்கூட்டியே கரும்பை அனைத்து இடங்களுக்கும் விற்பனைக்கு கொண்டுசெல்ல ஏதுவாக, கரும்பு அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருகின்றனா். அண்மையில் வீசிய காற்று, மழையால் கரும்பு எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என்பது இப்பகுதி கரும்பு விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன், சேத்தூா் கிராமத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி லோகநாதன் சனிக்கிழமை கூறியது:

செங்கரும்பு 9 மாத பயிா். ஒவ்வோா் ஆண்டும் சித்திரை மாதத்தில் கரும்பு கனு ஊன்றப்படும். கரும்பு பயிருக்கு களிமண் உதவாது. செம்மண் கலந்த நிலமாக இருக்கவேண்டும். இங்கு கரும்பு பயிரிட ஏற்ற மண் உள்ளது. 100 குழி நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளேன். இந்தப் பகுதியில் மொத்தம் 3 போ் தலா 100 குழி நிலத்தில் கரும்பு பயிரிடுவோம். நிகழாண்டு, மேலும் சிலா் கரும்பு பயிரிட்டுள்ளனா். வரும் 10 ஆம் தேதிவாக்கில் அனைவரும் அறுவடையை தொடங்கிவிடுவோம். உள்ளூா் வியாபாரிகளே வாங்கிச் செல்வா் என்றாா்.

காரைக்கால் பகுதிக்குத் தேவையான பொங்கல் கரும்பு, தமிழகப் பகுதியிலிருந்தே வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருநள்ளாறு பகுதியில் விளைவிக்கப்படும் கரும்பு அம்பகரத்தூா் சுற்றுவட்டாரத்தினா் தேவைக்கு மட்டுமே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com