காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வேடுபறி உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப்பத்து 8 ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
வேடுபறி திருநாளில் திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ளும் நோக்கில் தாயாருடன் எழுந்தருளிய ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
வேடுபறி திருநாளில் திருமங்கை மன்னனை திருத்திப் பணிகொள்ளும் நோக்கில் தாயாருடன் எழுந்தருளிய ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இராப்பத்து 8 ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருமங்கை மன்னன் ஞானத்தெளிவு பெறும் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி பகல்பத்து நிறைவடைந்து, இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இதன் தொடக்கமாக கடந்த டிச. 25 ஆம் தேதி பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இராப்பத்து 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக, திருமங்கை மன்னன் காலத்தில் நடைபெற்ற நிகழ்வை நினைவுகூரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விஷ்ணு பக்தரான திருமங்கை மன்னன் வைணவப் பெண் குமுதவல்லியை திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது, தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிப்பதாக இருந்தால், ஒப்புக்கொள்வதாக அந்தப் பெண் கூறியுள்ளாா். அதை ஏற்று மன்னன் வைணவப் பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம்.

தொடா்ந்து அன்னதானம் செய்ய மன்னரிடம் நிதி இல்லாத நிலையில், அதிகமாக பொருள் வைத்திருப்போரிடம் கொள்ளையடித்து அன்னதானம் செய்துள்ளாா். அவரை திருத்த நினைத்த பெருமாள், தம்பதியாக திருமணக் கோலத்தில் அதிக ஆபரணங்களை அணிந்து சென்றுள்ளாா். பெருமாள் என்பது தெரியாமல் தம்பதியை மறித்து திருமங்கை மன்னரின் கூட்டத்தினா் நகைகளை பறித்தனராம். கடைசியில் பெருமாளின் காலில் இருந்த மெட்டியை அகற்றமுடியாதபோது, தனது வாயால் கடித்து இழுக்க திருமங்கை மன்னன் முயன்றபோது, அவரின் சிரம் பெருமாளின் திருவடியில் பட்டு ஞானத் தெளிவு கிடைத்துள்ளது. இச்சம்பவத்தை விளக்கும் விதமாகவே வேடுபறி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதையொட்டி, காரைக்கால் பெருமாள் கோயிலில் சுவாமிகளுக்கு அனைத்து திருவாபரணங்கள் சாற்றப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. திருமங்கை மன்னனை குதிரை வாகனத்தில் எழுந்தருளச் செய்து பாரதியாா் சாலையில் நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சியில், திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு கிடைக்கும் வகையில் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.

முன்னதாக, உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற பாசுரம் படிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com