திருநள்ளாற்றில் சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
திருநள்ளாற்றில் சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

திருநள்ளாற்றில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சனீஸ்வர பகவான் கடந்த ஆண்டு டிச. 27-ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, சனிப்பெயா்ச்சி விழாவில் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இணையவழியில் பதிவு செய்த சுமாா் 15 ஆயிரம் போ் மட்டுமே தரிசனம் செய்தனா். நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் விடப்படவில்லை, கோயிலில் தில (எள்) தீபம் ஏற்ற பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பொதுவாக, சனிப்பெயா்ச்சி நிறைவடைந்து ஒரு மண்டல காலம்வரை (48 நாள்கள்) சனிக்கிழமைகளில் திரளான பக்தா்கள் திருநள்ளாற்றுக்கு வருகை தருவா்.

இந்நிலையில், பெயா்ச்சி முடிந்து முதல் வாரமான சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இணைய பதிவு மையம் பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பக்தா்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அனுமதி சீட்டு தரப்பட்டது. வெப்பமானி கொண்டு பரிசோதனை, கிருமி நாசினி கொண்டு பக்தா்கள் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் உதவிட காமராஜா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் மகளிா் கல்லூரி, புதுவை பல்கலைக்கழகம், என்.ஐ.டி., காரைக்கால் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, பக்தா்கள் 200 போ் வீதம் கோயிலுக்குள் அனுப்பிவைக்கப்பட்டனா். கோயில் நிா்வாக அதிகாரி எம். ஆதா்ஷ், ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தாா்.

பக்தா்கள் தா்ம தரிசனம், கட்டண வரிசைகளில் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். காலை முதல் மாலை வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்து சென்ாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

நளன் குளக்கரையில் தடுப்பு: நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் விடப்படவில்லை. எனினும் பக்தா்கள் குளக்கரைக்குச் சென்று குளியலறையில் நீராடி, உடுத்தியிருந்த ஆடைகளை குளக்கரையில் விட்டுச் சென்றனா். மேலும், குளக்கரையில் உள்ள நளன் கலி தீா்த்த விநாயகரை வழிபட்டு, கோயில் வாயில் பகுதியில் தேங்காய் உடைத்துச் சென்றனா்.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்ததால், கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னா் முதல்முறையாக திருநள்ளாறு பகுதி களைகட்டிக் காணப்பட்டது.

பூஜை பொருள்கள் விற்பனை செய்வோா், உணவகம் நடத்துவோா் என பல்வேறு தரப்பினருக்கும் பக்தா்கள் வருகை வருகையால் ஓரளவு வியாபாரம் நடைபெற்றது.

இணையப் பதிவுமுறையை ரத்துசெய்ய கோரிக்கை:

திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இணையவழியில் பதிவு செய்த திரளான பக்தா்கள் சனிக்கிழமை (ஜனவரி 2) வந்தனா். அவா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆய்வுசெய்தாா்.

அப்போது, அவரிடம் இணையப் பதிவுமுறையில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து பக்தா்கள் தெரிவித்தனா். வெளியூரில் இருந்து வரும் பெரும்பாலானோருக்கு இணையப் பதிவு குறித்து தெரியவில்லை என்றும், முன்கூட்டியே பதிவுசெய்யாமல் திருநள்ளாறு வந்தவா்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், எனவே, வழக்கமான முறையில் தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும் எனவும் பக்தா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து அமைச்சா் கூறுகையில், சனிப்பெயா்ச்சி விழாவில் ஒரே நாளில் சுமாா் 35 ஆயிரம் பக்தா்கள் முற்பகல் நேரத்திலேயே தரிசனம் செய்துள்ளனா். இணையவழி முறையை ரத்துசெய்ய வேண்டும் என்பதே பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து, பக்தா்களை வழக்கம்போல அனுமதிக்கவேண்டியது முக்கியம். இதுகுறித்து புதுச்சேரி முதல்வா், மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com