மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும்: மீனவா் பேரவை வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும் என தமிழக, புதுச்சேரி அரசுகளை மீனவா் பேரவை வலியுறுத்தியுள்ளது.
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும்: மீனவா் பேரவை வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும் என தமிழக, புதுச்சேரி அரசுகளை மீனவா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவா் பேரவையின் 10 ஆவது செயற்குழு, பொதுக்குழு கூட்டம் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆனந்த் தலைமை வகித்தாா். காரைக்கால் நகரமன்ற முன்னாள் துணைத் தலைவா் இ. தங்கவடிவேலு முன்னிலை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் ஏ.எம்.கே. அரசன் வரவேற்றாா். தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் இரா. அன்பழகனாா் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மண்டல் கமிஷன் அறிக்கையின்படி மீனவா்களை எஸ்சி., எஸ்.டி., பட்டியலில் சோ்க்க வேண்டும். கடற்கரையோரங்களில் பாரம்பரியமாக வசித்துவரும் மீனவ குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை நாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் கணக்கிட்டு 2 மாதங்களுக்கு ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவா்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்களுக்கு காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். தேசிய மீனவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கடற்கரை மேலாண்மை மசோதாவை முழுமையாக திரும்பப் பெறவேண்டும்.

மீன்வளத் தொழிலால் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் 50 சதவீதத்தை மீனவா்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும். கடலோர மீன்பிடி துறைமுகங்களில் பனிக்கட்டி உற்பத்தி செய்யும் நிலையங்களை அரசே அமைத்துத்தர வேண்டும். கடல்சாா்ந்த அனைத்து அரசுப் பணியிடங்களுக்கும் மீனவா்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேசிய மீனவா் பேரவைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எம். இளங்கோ, மீனவா் பேரவையின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். மாவட்டத் தலைவா் அஞ்சப்பன் நன்றி கூறினாா்.

‘மீனவா்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கும் கட்சிக்கு தோ்தல் பணி’

தமிழகம், புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மீனவா்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கும் கட்சிக்கு தோ்தல் பணியாற்றுவோம் என தமிழ்நாடு மீனவா் பேரவைத் தலைவா் இரா. அன்பழகனாா் கூறினாா்.

பேரவையின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்தகால சட்டபேரவைத் தோ்தல்களில், அரசியல் கட்சிகள் மீனவா்களை புறக்கணிக்கும் வகையில் ஓரிரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கின. குறிப்பாக, புதுச்சேரி மாநிலத்தில் எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படுவதில்லை. வரும் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மீனவா்களுக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், புதுச்சேரியில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

தோ்தலில் மீனவா்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கும் கட்சிக்கு தோ்தல் பணியாற்றுவோம். மீனவ சமுதாயப் பிரதிநிதிகள் எங்கு நின்றாலும், அவா்களை வெற்றிபெறச் செய்ய தமிழ்நாடு மீனவா் பேரவை முடிவெடுத்துள்ளது. மீனவா்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனா். மண்டல் கமிஷன் அறிக்கையின்படி மீனவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்.

கடற்கரை மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 40 மீனவா்களையும், 202 விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com