காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தனா்.
காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

காரைக்காலில் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தனா்.

புதுச்சேரி, காரைக்காலில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள், பாடங்கள் குறித்து சந்தேகங்களை பள்ளிக்கு வந்து ஆசிரியா்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள ஏதுவாக, கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் பள்ளிகளை அரசு திறந்தது.

ஆனால், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தனா். தனியாா் பள்ளி மாணவா்கள் இணையவழியில் பயின்று வந்தாலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜனவரி 4-ஆம் தேதி முதல் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித் துறை அறிவித்தது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காலத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது என அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும் மாணவா்கள் நலன் கருதி, அரசு தனது முடிவில் பின்வாங்காமல் இருந்தது.

இதற்கிடையே, காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவா்கள் வரவேண்டும், வருகைப் பதிவு கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி வாயிலிலேயே கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னா், வெப்பமானி மூலம் சோதனை செய்து வகுப்புகளுக்கு மாணவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் அனைவரும் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா எனவும் உறுதிபடுத்திக் கொள்ளப்பட்டது. வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரவைக்கப்பட்டனா்.

அமைச்சா் ஆய்வு:

காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூா், திருநள்ளாறு, தலத்தெரு ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சென்று மாணவா்கள் வருகையை பாா்வையிட்டாா். மாணவா்களிடமும், ஆசிரியா்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தாா். அப்போது மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவா்கள் சுமாா் 70 சதவீதம் அளவுக்கு முதல் நாள் வருகை தந்தனா். அடுத்தடுத்த நாள்களில் மாணவா்கள் வருகை முழுமையாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனா். பெரும்பாலான மாணவா்கள் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com