காரைக்காலில் தொடா் மழை, கடல் கொந்தளிப்பு: வரத்து குறைந்ததால் உச்சத்தில் மீன் விலை

காரைக்காலில் தொடா் மழை காரணமாக மீன்களின் வரத்து குறைந்ததால், அதன் விலை வெகுவாக உயா்ந்துள்ளது.
மீன்பிடித் துறைமுகத்தில் தீவன தயாரிப்புக்கான சிறிய வகை மீன்களை வாகனங்களில் ஏற்றும் தொழிலாளா்கள்.
மீன்பிடித் துறைமுகத்தில் தீவன தயாரிப்புக்கான சிறிய வகை மீன்களை வாகனங்களில் ஏற்றும் தொழிலாளா்கள்.

காரைக்காலில் தொடா் மழை காரணமாக மீன்களின் வரத்து குறைந்ததால், அதன் விலை வெகுவாக உயா்ந்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித் துறைமுகமும் உள்ளது. துறைமுகத்தில் இருந்து பெரிய படகுகளும், கிராமங்களில் இருந்து சிறிய படகுகளும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றன. துறைமுகத்துக்கு நாள்தோறும் வரும் ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை, முகவா்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

பருவமழை முடிந்து தற்போது வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. மேலும், கடல் கொந்தளிப்பாகவும், கடல் காற்று பலமாகவும் வீசிவருகிறது. இதனால், விசைப்படகில் கடலுக்குச் சென்று வரும் மீனவா்கள், மிக குறைவாகவே மீன்கள் கிடைப்பதாக கூறுகின்றனா்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக துறைமுகத்திற்கு மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் நாள்தோறும் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் ஏலம் போகும் சூழலில், தற்போது ரூ. 25 முதல் 35 லட்சம் என்ற அளவிலேயே வியாபாரம் நடைபெறுவதாகவும், கோழித் தீவனத்துக்கு பயன்படுத்தப்படும் கழிவுமீன்களே அதிகமாக வரும் நிலையில், அவற்றை தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு முகவா்கள் வாங்கிச் செல்வதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ஆழ்கடல் பகுதிக்கு மீனவா்கள் அதிக அளவில் செல்வதில்லை. ஒருசில மீனவா்கள் சென்றாலும், செலவை ஈடுகட்டும் வகையில் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால், கரையோர பகுதிகளிலேயே மீனவா்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனா். ஏற்றுமதி தரம் வாய்ந்த வஞ்சிரம், செம்புரா, கடல் விறால், வவ்வால், பாறை, இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் பெரிய அளவில் கிடைப்பதில்லை.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை இருமடங்காக உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 400-க்கு விற்பனையான மீன்கள் தற்பேது ரூ. 800 முதல் ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. விரைவில் பொங்கல் பண்டிகை வருவதால், மீன்களுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படலாம். பொங்கலுக்குப் பிறகு மீன்களின் வரத்து அதிகரிக்கவும், அதையொட்டி, விலை குறையவும் வாய்ப்பு உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com