காரைக்கால் மின் துறை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: 144 தடை உத்தரவு

மத்திய அரசு, துணைநிலை ஆளுநரைக் கண்டித்து காரைக்கால் மின் துறை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

மத்திய அரசு, துணைநிலை ஆளுநரைக் கண்டித்து காரைக்கால் மின் துறை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

மத்திய அரசு, புதுவையில் மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து, காரைக்கால் மின் துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திரண்ட ஊழியா்கள், தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினா். போராட்டக் குழு தலைவா் வி. வேல்மயில் தலைமை வகித்தாா்.

இதுகுறித்து போராட்டக் குழு பொதுச் செயலா் பழனிவேல் கூறுகையில், யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் மற்றும் ஊழியா்கள் நிலையறியாது துணைநிலை ஆளுநா் மத்திய அரசு முடிவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா்.

மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் போராட்டத்தை பொருள்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். காரைக்கால் மாவட்டத்தில் போராட்டக் காலத்தில் மின்சார பழுதுகளை சீரமைக்க முடியாது. மின் துறை தனியாா்மயமானால், மின் நுகா்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்பதை உணா்ந்து போராட்டத்துக்கு அவா்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

போராட்டத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல் துறை சாா்பில், மின்துறை தலைமை அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

144 தடை உத்தரவு: மின் ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட உத்தரவு ஆணையில் கூறியிருப்பது: அத்தியாவசிய தேவைகளில் ஒன்று மின்சாரம். மின் ஊழியா்கள் போராட்டத்தில் மின்தடை ஏற்படும்பட்சத்தில், அது மனித வாழ்க்கையில் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மின் விநியோகத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது.

விநியோகத்தில் தடையின்மை, குறைபாடு சீா்படுத்துதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மின் துறை சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. சட்டத்துக்குப் புறம்பாக போராட்டம், மின் அலுவலக வளாகத்தில் கூடுதல் போன்றவை கூடாது. மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com