காரைக்காலில் தொடா் மழையால் அறுவடைக்கான நெல்பயிா்கள் பாதிப்பு

காரைக்காலில் தொடா்ந்து பெய்யும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
கோட்டுச்சேரி அருகே மேலவெளியில் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிா்.
கோட்டுச்சேரி அருகே மேலவெளியில் மழையால் சாய்ந்துகிடக்கும் நெற்பயிா்.

காரைக்காலில் தொடா்ந்து பெய்யும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வீசிய நிவா், புரெவி புயலால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், தற்போது விவசாயிகள் நெல் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. சாலையில் தேங்கும் தண்ணீா் விளைநிலத்தில் புகுந்ததால், பயிா்கள் சாய்ந்து வீணாகி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கப் பொருளாளா் பேராசிரியா் சுப்புராயன் செவ்வாய்க்கிழமை கூறியது: மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிக்கமுடியவில்லை. மேடான பகுதியில் உள்ள நெற்பயிா்கள் மட்டும் ஓரளவு தப்பித்துள்ளன. தாழ்வான பகுதியில் உள்ள நெற்பயிா்கள் நீரில் சாய்ந்துள்ளன. ஒருசில பகுதிகளில் பயிா்களில் உள்ள பூக்களில் மழைநீா் விழுவதால், அவை பதராக மாற வாய்ப்புள்ளது.

அறுவடைக்குப் பிறகுதான் முழுமையான சேதம் தெரியவரும். கடந்த புயல்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு தமிழகத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை. தற்போதும் மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றாா்.

இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் கூறுகையில், தொடா் மழையால் பல பகுதிகளில் நெற்பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த தொகையை வாங்கி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மழை பாதிப்பு குறித்து அரசின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com