வேளாண் அறிவியல் நிலையத்தில் தைப் பட்ட காய்கறி சாகுபடி கருத்தரங்கு

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் ‘தைப் பட்ட காய்கறி சாகுபடித் தொழில்நுட்பங்கள்‘
காய்கறி சாகுபடி தொழில்நுட்ப விளக்க கையேட்டை விவசாயிக்கு வழங்கிய வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜகாகிா்தாா்.
காய்கறி சாகுபடி தொழில்நுட்ப விளக்க கையேட்டை விவசாயிக்கு வழங்கிய வேளாண் கல்லூரி முதல்வா் ஷாமராவ் ஜகாகிா்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் ‘தைப் பட்ட காய்கறி சாகுபடித் தொழில்நுட்பங்கள்‘ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் முனைவா் குமார. ரத்தினசபாபதி வரவேற்றாா். அப்போது அவா் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண் நிறுவனம், 2021 ஆம் ஆண்டை சா்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதைப் போற்றும்விதமாக வேளாண் அறிவியல் நிலையத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. மேலும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கத்தரி, மிளகாய், தக்காளி பொன்ற நாற்றுகளைத் தரமான முறையில் உற்பத்தி செய்து குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் முனைவா் ஷாமராவ் ஜகாகிா்தாா் கருத்தரங்கை தொடங்கிவைத்தாா். அவா் பேசுகையில், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் சாகுபடிக்குப் பிறகு கிடைக்கக் கூடிய தண்ணீரை குறைவாகப் பயன்படுத்தி, காய்கறி சாகுபடியை மேற்கொள்ள முன்வர வேண்டும். நாட்டு ரகங்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். நாட்டு ரகங்கள் விளைச்சல் குறைவாக கொடுத்தாலும், அவற்றில் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால், நாம் அதிக ரசாயனப் பொருள்களை பயன்படுத்தத் தேவை இருக்காது. வேளாண் அறிவியல் நிலையம் பஞ்சகவ்யா, மண்புழு உரம் பொன்ற இயற்கை இடுபொருள்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது என்றாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் பேசுகையில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் வாயிலாக 121 விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட்டு, 60 ஏக்கரில் உயா் விளைச்சல் காய்கறி சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நெற்பயிரைவிட, காய்கறி சாகுபடியில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா்கள் வி. சுந்தரம், சி. ஜெயலட்சுமி, எம். காண்டீபன் மற்றும் பாலூா் காய்கறி ஆராய்ச்சி நிலைய விதை தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியா் வி. விஜயகீதா ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் காய்கறி சாகுபடிக்குத் தேவையான உயிரிப்பொருள்கள் மற்றும் இடுபொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. காய்கறி சாகுபடி உத்திகள் குறித்த விநாடி- வினா நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 150 விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com