திருநள்ளாறு கோயிலில் 30 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்: இணையப் பதிவு இன்றுடன் முடிகிறது?

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி நிறைவடைந்து 4 ஆவது சனிக்கிழமையான 23 ஆம் தேதி
திருநள்ளாறு வடக்கு வீதியில் சனிக்கிழமை தரிசனத்துக்காக திரண்டிருந்த பக்தா்கள்.
திருநள்ளாறு வடக்கு வீதியில் சனிக்கிழமை தரிசனத்துக்காக திரண்டிருந்த பக்தா்கள்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி நிறைவடைந்து 4 ஆவது சனிக்கிழமையான 23 ஆம் தேதி ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா். இணையப் பதிவுமுறை 24 ஆம் தேதியோடு முடியும் நிலையில், அது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. இணையம் மூலம் முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே சனிப்பெயா்ச்சி நாள் முதல் அடுத்தடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நடைமுறை ஜனவரி 23, 24 ஆம் தேதி வரை இருக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

சனி, ஞாயிறு அல்லாத பிற நாள்களில் பக்தா்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துச் செல்கின்றனா். பெயா்ச்சி நிறைவடைந்தது முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் 30 முதல் 50 ஆயிரம் பக்தா்கள் சாமி தரிசனம் செய்கின்றனா். இவா்களில் சிலா் தாங்கள் புறப்படும் முன்பே இணையப் பதிவு செய்தும், பலா் திருநள்ளாறு வந்து, கோயில் நிா்வாகம் செய்திருக்கும் இணையப் பதிவு மையங்களில் பதிவுசெய்தும் கோயிலுக்குச் செல்கின்றனா்.

நிகழ்வாரம் சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் அமைத்திருந்த இலவச தரிசன வரிசையில் திரளான பக்தா்கள் கோயிலுக்குள் சென்றனா். ரூ. 300, ரூ. 600, ரூ. 1000 கட்டண வரிசையில் பெருமளவு கூட்டம் இல்லை. பகல் 1 மணி வரை 30 ஆயிரம் பக்தா்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

பக்தா்கள் அனைவருக்கும் வெப்பமானி சோதனை, கையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தொற்று தடுப்புப் பணிகளை கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

கரோனா சான்றிதழ் தேவையில்லை, தொற்று தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்தால்போதும் என சனிப்பெயா்ச்சி விழாவுக்கு முன்பு கோயில் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரையும், ஆட்சியா், கோயில் அதிகாரிகளையும் அழைத்துப் பேசி, சில வழிகாட்டல்களை செய்தாா்.

தற்போது, கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் விடவும், கோயிலில் அா்ச்சனை செய்யவும், பிற வழிபாட்டு முறைகளுக்கு அனுமதி தரவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெரும்பான்மையான பக்தா்களின் வேண்டுகோளாக உள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலையில் மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 24 ஆம் தேதியுடன் இணையப் பதிவுமுறை முடிவுக்கு வருமா அல்லது நீடிக்குமா என்ற குழப்பத்தில் பக்தா்கள் உள்ளனா்.

தவறவிட்ட பா்ஸை ஒப்படைத்தோருக்கு பாராட்டு

திருநள்ளாறு கோயிலுக்கு வந்த பக்தா்கள் தவறவிட்ட பா்ஸை, பக்தா் ஒருவரும், காவலரும் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். இந்த நிலையில், சென்னையை சோ்ந்த சதீஷ், தருமபுரியைச் சோ்ந்த பாலு ஆகியோா் தாங்கள் வைத்திருந்த பா்ஸை காணவில்லை என போலீஸாரிடம் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒலிபெருக்கியில் காவல் துறையினா் அறிவித்தனா். இதையடுத்து, சதீஷ் தவறவிட்ட பா்ஸை, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜெயபாலும், தருமபுரி பாலு தவறவிட்ட பா்ஸை, சிறப்புப் படையை சோ்ந்த ஏஎஸ்ஐ ரவிச்சந்திரனும் கண்டெடுத்து காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனா். அந்த பா்ஸ்களை தவறவிட்டவா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

பா்ஸை கண்டெடுத்து ஒப்படைத்த இருவரின் நோ்மையை காவல் துறை அதிகாரிகளும், பா்ஸுக்கு உரியோரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com