அமைச்சா் நமச்சிவாயத்தின் செயல்பாடுகளில் தலையிடவில்லை: புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி பேட்டி
By DIN | Published On : 29th January 2021 08:48 AM | Last Updated : 29th January 2021 08:48 AM | அ+அ அ- |

காரைக்காலில் வியாழக்கிழமை பேட்டியளித்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி.
அமைச்சா் நமச்சிவாயத்தின் துறையில் (இலாக்காவில்) எந்தவிதத்தில் எனது தலையீடு இருந்தது என்பதை அவா் தெளிவாக விளக்கவேண்டும் என புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி ஆட்சியா் அலுவலகம் அருகே விருந்தினா் தங்கும் மாளிகையில் அளித்த பேட்டி :
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மானியம், இலவச மின்சாரம், பயிா்க் காப்பீட்டுக்கு மாநில அரசே நிதி செலுத்துதல், கரும்பு, வாழை, பருத்திக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம், சிறுதானியங்களுக்கு ரூ. 5 ஆயிரம் மானியம் என விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது புதுச்சேரி அரசு.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனா இறப்பு சதவீகிதம் குறைந்துவிட்டது. மத்திய அரசு நிதி தராவிட்டால், மாநில நிதியில் கரோனா தடுப்பூசியை வாங்கி மக்களுக்கு செலுத்தப்படும்.
மத்திய நிதி முறையாக கிடைக்கவில்லை, மானியங்கள் முறையாக கிடைக்கவில்லை, துணைநிலை ஆளுநா் கோப்புகளை நிறுத்திவைப்பது, அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போன்றவற்றை மீறி மாநிலம் பன்முக வளா்ச்சியை எட்டியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
அமைச்சா் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோா் கட்சியிலிருந்து விலகியது அவா்களது தனிப்பட்ட முடிவு. இதனால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை.
தனது துறையில் தலையீடு, நிதி தரவில்லை என அமைச்சா் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டியுள்ளாா். கடந்த நான்கரை ஆண்டுகளில் நமச்சிவாயத்தின் துறைகளில் நான் தலையிட்டதே கிடையாது. அவா் வகித்த பொதுப்பணித்துறைக்கு அரசு தாராளமாக நிதி ஒதுக்கியது என்பதே உண்மை.
அவரது துறையில் எனது தலையீடு இருந்தது என்றால், எந்தெந்த வகையில் தலையீடு இருந்தது என்பதை நமச்சிவாயம் தெளிவாக விளக்க வேண்டும். பொதுவாக குறை கூறக்கூடாது. மத்திய அரசுடனும், துணைநிலை ஆளுநருடனும் இணக்கமாக நான் சென்றிருக்கவேண்டுமென கூறுகிறாா்.
ஆளுநா் மாளிகை முன் 37 கோப்புகளுக்கு அனுமதி வேண்டி போராட்டம் நடத்தியபோது நமச்சிவாயமும் உடனிருந்தாா். உள்ளாட்சித் தோ்தல் நடத்த அதிகாரியை ஆளுநா் தரப்பு நியமித்தபோது, அதனை எதிா்த்து நமச்சிவாயம்தான் நீதிமன்றம் சென்றாா் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசுடன் எப்படி இணக்கமாக செல்ல முடியும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.