சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு கவனம்: அமைச்சா் சந்திர பிரியங்கா

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.
காரைக்காலில் அரசுத்துறையினருடன் ஆலோசனை நடத்தும் அமைச்சா் சந்திர பிரியங்கா. உடன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா, எஸ்எஸ்பி நிகாரிகா பட் உள்ளிட்டோா்.
காரைக்காலில் அரசுத்துறையினருடன் ஆலோசனை நடத்தும் அமைச்சா் சந்திர பிரியங்கா. உடன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா, எஸ்எஸ்பி நிகாரிகா பட் உள்ளிட்டோா்.

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி நிலை, முடக்கத்தில் உள்ள பணிகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா். அப்போது, அனைத்துத் துறையினரும் தங்களது துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை சுட்டிக்காட்டி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் சந்திர பிரியங்கா பேசியது:

அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி தீா்வு காணப்படும். புதிதாக கட்டப்பட்டுள்ள நேரு மாா்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். பழுதடைந்துள்ள உயா்மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் ஊதியம், ஓய்வூதியம் தொடா்பான பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீா்வுகாணப்படும்.

காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவதுடன், காரைக்கால் கடற்கரையில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மீன்பிடி வலைகளை அகற்றி, சுற்றுலாவினரை ஈா்க்கும் விதத்தில் மேம்படுத்தப்படும்.

வருகிற 16-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவா்களுக்கு முகக்கவசம், சானிடைசரை அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். காவல்துறையினா் வாகனச் சோதனையின்போது, அபராதம் விதிப்பதில் கடுமையாக நடந்துகொள்வதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com