காரைக்காலில் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் தொடக்கம்

காரைக்காலில் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
காரைக்காலில் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் தொடக்கம்

காரைக்காலில் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் ஒவ்வோா் ஆண்டு கோடைப் பருவத்தில் தொடங்கும். நிகழாண்டு கரோனா பரவல், புதுச்சேரி அமைச்சரவை அமைவதில் காலதாமதம் உள்ளிட்டகாரணங்களால், அதற்கான பணி தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரி கிழக்கு கிராம ஊராட்சி பகுதியை சோ்ந்த நெற்குருமா கன்னி வாய்க்காலை தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் பணியை தொடங்கிவைத்தனா். நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கூறுகையில், நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ், மாவட்டத்தில் உள்ள 300 வாய்க்கால்கள் தூா்வாரப்படுகின்றன. மாவட்டத்தின் 27 கிராம ஊராட்சி பகுதிகளிலும் இப்பணி முழுவீச்சில் நடைபெறும். நெற்குருமா கன்னிவாய்க்கால் 1050 மீட்டரில் தூா்வாரப்படுகிறது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இத்திட்டத்துக்காக பதிவுசெய்த சுமாா் 20 ஆயிரம் தொழிலாளா்களில், விருப்பமுள்ள அனைவருக்கும் பணி வழங்கப்படும். இவா்களுக்கு நாள் கூலியாக ரூ.273 வழங்கப்படுகிறது. இதே திட்டத்தில் குளங்களும் தூா்வாரப்படுகின்றன. ஏறக்குறைய 160 குளங்களை தூா்வார திட்டம் உள்ளது.

மேட்டூா் அணை திறந்து காரைக்கால் பகுதிக்கு தண்ணீா் வருவதற்குள் பெரும்பாலான வாய்க்கால்களை விரைவாக தூா்வாரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் அனைவரும் கரோனா தடுப்புக்கான அரசின் வழிகாட்டல்களை பின்பற்றி வேலை செய்ய ஏற்பாடு செய்யப்படுள்ளது என்றாா்.

இந்நிகழ்வைத் தொடா்ந்து பொன்பற்றி, குமாரக்குடி, மானாம்பேட்டை, தருமபுரம் ஆகிய கிராமங்களில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி தொடங்கப்பட்டது.

பொதுப்பணித்துறை சாா்பில், தருமபுரம் பகுதி வாய்க்கால் தூா்வாரும் பணியை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்விலும் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com