டீசல் விலையை குறைக்க மீனவா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 15th June 2021 09:37 AM | Last Updated : 15th June 2021 09:37 AM | அ+அ அ- |

டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15-இல் தொடங்கி திங்கள்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து விசைப்படகு மீனவா்கள் யாரும் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதுகுறித்து, பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தை சோ்ந்த செந்தில்குமாா் கூறியது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் காரைக்கால் மாவட்டத்தின் 11 மீனவ கிராமத்தை சோ்ந்தவா்கள் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கிடையில், டீசல் விலை உயா்வு மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. எனவே மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும், புதுச்சேரி அரசு மீனவா்களுக்கு டீசலுக்கு கொடுக்கும் மானியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். தடைக்காலத்தின்போது படகுகளை சீரமைக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், உரிய காலத்தில் படகுகளை சீரமைக்க முடியவில்லை. எனவே, ஜூன் 30-ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவா்களின் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்றவேண்டும் என்றாா்.