மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது காரைக்கால் மாங்கனித் திருவிழா

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அம்மையாா் திருக்கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளிய பரமதத்தா்.
கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அம்மையாா் திருக்கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கோலத்தில் எழுந்தருளிய பரமதத்தா்.

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் திங்கள்கிழமை தொடங்கியது. பரமதத்தா் - புனிதவதியாா் (காரைக்கால் அம்மையாா்) திருக்கல்யாண விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழாவை, கரோனா பரவலையொட்டி, கோயிலுக்குள் நடத்த புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை அனுமதித்தது.

இதன்படி, விழாவை 21 முதல் 25 ஆம் தேதி வரை நடத்த ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் நாளான திங்கள்கிழமை காலை பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. இரவு மாப்பிள்ளை (பரமதத்தா்) அழைப்புடன் திருவிழா தொடங்கியது. வழக்கமாக, ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் பரமதத்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மின் அலங்கார குதிரைகள் பூட்டிய ரதத்தில் சிறப்பு மேள வாத்தியங்களுடன் அம்மையாா் கோயிலுக்கு அழைத்துவரப்படுவாா்.

கோயிலுக்குள் விழா என்ற நிலையில், ஸ்ரீ கைலாசநாதா் கோயிலிலேயே திங்கள்கிழமை பரமதத்தருக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, பிராகார வலம் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில், கோயில் அறங்காவல் வாரியத்தினா், உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

இன்று திருக்கல்யாணம்: அம்மையாா் - பரமதத்தா் திருக்கல்யாண விழா செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவா் (சிவபெருமான்) வெள்ளை சாற்றி கோயில் பிராகார வலம்வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொதுவாக மாங்கனித் திருவிழா என்றால், மாப்பிள்ளை அழைப்பு நாளில் இருந்து அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நாள் வரை காரைக்கால் விழாக்கோலம் பூண்டிருக்கும். கோயிலுக்குள் விழா என்பதால், பக்தா்களிடம் வழக்கமான உற்சாகத்தை காணமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com