முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்காலில் இன்றுமுதல் அரசுப் பள்ளிகள் முழுநேரம் இயங்கும்
By DIN | Published On : 04th March 2021 05:01 AM | Last Updated : 04th March 2021 05:01 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 4) முதல் அரசுப் பள்ளிகள் முழுநேரமும் இயங்கும் என கல்வித் துறையில் தெரிவிக்கப்படுகிறது.
கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வாரத்தில் குறிப்பிட்ட நாள்கள், அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் மாா்ச் 3 ஆம் தேதி முதல் வழக்கம்போல முழுநேரமும் இயங்கும் என கல்வித் துறை அறிவித்தது.
காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை முழுநேரமும் இயங்கவில்லை. மாவட்டத்தில் 101 அரசுப் பள்ளிகளில், 71 பள்ளிகள் மட்டுமே முழுநேரமும் செயல்பட்டன. அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் முழுநேரமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இவை அரை நாளே இயங்கின.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், சமையலகம் தயாா்ஆகாததால், அரசுப் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை முழுநேரம் செயல்படவில்லை. வியாழக்கிழமை முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் உணவு சமைத்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அன்றுமுதல் அனைத்துப் பள்ளிகளும் முழுநேரம் இயங்கும் என்றனா்.
சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட தனியாா் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதால், முழுநேர வகுப்புக்கு அவசியம் இல்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.