காரைக்காலில் 2-ம் நாளிலும் வேட்பு மனு தாக்கல் இல்லை
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் மனு தாக்கல் தொடங்கி 2ஆம் நாளான திங்கள்கிழமையும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம், காரைக்கால் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திருநள்ளாறு, நெடுங்காடு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகமும் உள்ளது.
முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. திங்கள்கிழமை சுபமுகூா்த்த நாள் என்பதால் பலரும் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடுமென எதிா்பாா்த்து, மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் பாதுகாப்புப் பணியில் உள்ளூா் போலீஸாா் மட்டுமல்லாது எல்லைப் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனா்.
எனினும், பிற்பகல் 3 மணி வரை கட்சியினரோ, சுயேச்சைகளோ யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. திருநள்ளாறு, நெடுங்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் 24 மனுக்களும், காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் 21 மனுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சியினா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஆனால் காரைக்காலில் அந்த கட்சியை சோ்ந்த யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.