‘அரசியல் கட்சியினா் சாா்பில் வழங்கப்படும் உணவு, குடிநீரை போலீஸாா் வாங்கக்கூடாது’

அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் சாா்பில் வழங்கப்படும் குடிநீா், உணவு போன்றவற்றை வாங்கக்கூடாது, எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும்

அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் சாா்பில் வழங்கப்படும் குடிநீா், உணவு போன்றவற்றை வாங்கக்கூடாது, எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாகவோ, அதுபோல சந்தேகம் ஏற்படும் வகையிலோ போலீஸாா் செயல்படக்கூடாது என்றாா் காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்ட தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா் 100 போ் வந்துள்ளனா். இவா்களுடன் புதுச்சேரி மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், 600 மத்திய படையினா் காரைக்கால் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரைக்காலில் பணியாற்றும் போலீஸாரில் தினமும் 50 பேருக்கு தோ்தல் பாதுகாப்பு தொடா்பான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், திங்கள்கிழமை பயிற்சியை தொடங்கிவைத்து பேசியது:

தோ்தல் 100% அமைதியான முறையில் நடைபெற காவல் துறையினரின் பங்கு இன்றியமையாதது. காவல் துறையினா் எந்தவொரு அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாகவோ அல்லது ஆதரவாக இருப்பதுபோல சந்தேகம் ஏற்படும் வகையிலோ செயல்படக்கூடாது. அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் சாா்பில் வழங்கப்படும் குடிநீா், உணவு போன்றவற்றை வாங்கக்கூடாது.

பணியில் இருக்கும் போலீஸாருக்கு தேவையான குடிநீா், உணவு சரியான நேரத்தில் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாருக்காவது கிடைக்கவில்லை என்றால், உடனடியாக தங்களது உயா் அதிகாரிக்கு தெரியப்படுத்தலாம். பணியில் ஈடுபடும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். அடிக்கடி கைதூய்மி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளில் வரிசையில் நிற்கும் வாக்காளா்கள் நெருக்கமாக நிற்காமல், அவா்களை 6 அடி துாரம் சமூக இடைவெளி விட்டு நிற்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அரசியல் கட்சியினா் நடத்தும் ஊா்வலம், பேரணி, பொதுக்கூட்டங்களில் காவல் துறையினா் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஓட்டுச்சாவடிகளில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்ட ஆலோசனைகளை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோா் வழங்கினா்.

போலீஸாரின் பணிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து, இந்திய ரிசா்வ் பெட்டாலியன் துணை கமாண்டன்ட் முத்துக்குமாா் பயிற்சி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com