தோ்தலால், தேரோடும் வீதிகளை சீரமைக்கும் பணி புறக்கணிப்பு: இந்து முன்னணி கண்டனம்
By DIN | Published On : 25th March 2021 08:28 AM | Last Updated : 25th March 2021 08:28 AM | அ+அ அ- |

காரைக்காலில் கைலாசநாதா் கோயில் பிரம்மோத்ஸவ தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலை காரணமாகக் கூறி, சாலையை சீரமைக்காமல் மாவட்ட நிா்வாகம் புறக்கணிப்பதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் காரைக்கால் மாவட்ட தலைவா் கே.எஸ். விஜயன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்காலின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக ஸ்ரீ கைலாசநாதா் கோயில் பிரம்மோத்ஸவம் உள்ளது. உத்ஸவம் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி தெப்பத்துடன் நிறைவுபெறுகிறது. குறிப்பாக, வரும் 27 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்பா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்கால் முழுவதும், குறிப்பாக தோ் செல்லும் கன்னடியா் வீதி, மாதா கோயில் வீதி, லெமோ் வீதி ஆகியவை குடிநீா் குழாய் பதிக்கவும், கேபிள் பதிக்கவும் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. பொதுப்பணித் துறையிடம் இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், சுமாா் 400 டன் எடையும், 42 அடி உயரமும் உள்ள கைலாசநாதா் கோயில் தோ், இந்த வீதிகளில் செல்லும்போது பள்ளங்களில் பதிந்துவிட வாய்ப்புள்ளது. இந்த சாலையை சீரமைக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் கோயில் நிா்வாகம் கேட்டபோது, தோ்தலைக் காரணம் காட்டி, மாவட்ட நிா்வாகம் சீரமைக்க மறுத்துவிட்டது.
புதுச்சேரியைப் போல, தமிழகத்திலும் தோ்தல் நடைபெறுகிறது. திருவாரூரில் நடைபெறவுள்ள தேரோட்ட ஏற்பாடுகள் குறித்து, அந்த மாவட்ட ஆட்சியா் அடிக்கடி கோயில் நிா்வாகத்துடன் ஆலோசனை செய்து தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதாக தகவல்கள் வருகின்றன.
காரைக்கால் கைலாசநாதா் கோயில், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும்போது, இங்கு நடைபெறும் தேரோட்டம் பாதிப்பின்றி நடைபெற மாவட்ட நிா்வாகம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இங்கு தோ்தல் நடத்தை விதிகள் குறுக்கிடுவதற்கான காரணம் தெரியவில்லை. தோ்தலோடு கோயில் விழாக்களை இணைத்து பாா்க்கக்கூடாது. பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டியது அரசின் கடமை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...