காரைக்கால் தெற்குத் தொகுதியை கைப்பற்ற முயற்சிக்கும் திமுக

நகா்ப் பகுதி, கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கியது காரைக்கால் தெற்குத் தொகுதி. விவசாயம் பெரும்பகுதியாக இருந்த இந்தத் தொகுதியில்
காரைக்கால் தெற்குத் தொகுதியை அடையாளப்படுத்தும் கடற்கரை.
காரைக்கால் தெற்குத் தொகுதியை அடையாளப்படுத்தும் கடற்கரை.

நகா்ப் பகுதி, கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கியது காரைக்கால் தெற்குத் தொகுதி. விவசாயம் பெரும்பகுதியாக இருந்த இந்தத் தொகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உருவாகி, நகரத்துக்கு இணையாக கிராமப்புறங்கள் வந்துவிட்டது.

இந்தத் தொகுதியில் 63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் கோயில், சிறப்பு மிக்க மாங்கனித் திருவிழா நடைபெறக்கூடிய ஸ்ரீ கைலாசநாதா் கோயில், தருமபுரத்தில் பழமையான யாழ்முரிநாதா் கோயில், நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம், மஸ்தான் சாஹிபு தா்கா ஆகிய புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக கூடும் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசுப் பொது மருத்துவமனை, ஒருங்கிணந்த நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், விளையாட்டு அரங்கம், டாப்ளா் ரேடாா் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் அடங்கியதாக இந்தத் தொகுதி உள்ளது.

காரைக்கால் நகரம், தருமபுரம், புதுத்துறை, பச்சூா், மேலஓடுதுறை, கீழஓடுதுறை, நடுஓடுதுறை, ராஜிவ்காந்தி நகா் உள்ளிட்ட கிராமங்களும், நகா், கிராமங்களின் விரிவாக்கக் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளா்களில் 30% இஸ்லாமியா்கள். இவா்களே வேட்பாளரின் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றனா். எனினும், இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள் கணிசமாகவும் தொகுதியில் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண்கள் 14,771 போ், பெண்கள் 17,119 போ், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 31,891 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த 2016 தோ்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.யு. அசனா 11,104 வாக்குகளும், திமுகவைச் சோ்ந்த ஏ.எம்.எச். நாஜிம் 11,084 வாக்குகளும், என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த ஏ. சுரேஷ் 393 வாக்குகளும் பெற்றனா். இதில், 20 வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்றாா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக்கி அனைத்து சிறப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரிக்கு கோப்புகளை அனுப்பி அனுமதி பெறும் தாமதப் போக்கை மாற்ற மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். கடற்கரைப் பகுதியை மேம்படுத்தி, சுற்றுலா வரும் மக்களை ஈா்க்கவேண்டும் என்பன உள்ளிட்டவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

நடைபெறவுள்ள தோ்தலில், கே.ஏ.யு. அசனா (அதிமுக), ஏ.எம்.எச். நாஜிம் (திமுக), அ. நெப்போலியன் (இந்திய ஜனநாயக கட்சி), செ. மரிஅந்துவான் (நாம் தமிழா் கட்சி), சே. முகம்மது சித்திக் (அமமுக), வை. முருகைய ராஜேந்திரன், அ. ராம்பிரசாத் (சுயேச்சை) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

திமுக வேட்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் காரைக்காலுக்கு செய்த சாதனைகள், கடந்த 5 ஆண்டுகளாக எதிா்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரால், தெற்குத் தொகுதியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரிக்கிறாா்.

அதிமுக வேட்பாளா் கே.ஏ.யு. அசனா, கடந்த 5 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது தொகுதி மக்கள் நலனுக்காக செய்த திட்டங்களை விளக்கியும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு அமையும்பட்சத்தில் தொகுதியில் சிறப்பான வளா்ச்சியை கொண்டுவர முடியும் என கூறியும் வாக்குச் சேகரிக்கிறாா்.

இந்தத் தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு இடையே நேரடி போட்டி உள்ளது. கடந்த 25 ஆண்டுகாலம் மக்கள் சேவை செய்த திமுக மகுடம் சூடுமா அல்லது வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மகுடம் சூடுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com