மும்முனைப் போட்டி: நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் கரைசேரப்போகும் கப்பல் எது?

காரைக்கால் மாவட்டத்தில் ஆன்மிகத் தலங்கள், துறைமுகம் என பல சிறப்புகளைப் பெற்ற நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தொகுதியை அடையாளப்படுத்தும் காரைக்கால் துறைமுகம்.
தொகுதியை அடையாளப்படுத்தும் காரைக்கால் துறைமுகம்.

காரைக்கால் மாவட்டத்தில் ஆன்மிகத் தலங்கள், துறைமுகம் என பல சிறப்புகளைப் பெற்ற நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில், வாக்கு எண்ணிக்கை தொகுதி வரிசையில் 3 ஆவதாக வருவது நிரவி - திருப்பட்டினம் தொகுதி. திருப்பட்டினம் பகுதி வாஞ்சியூரில் காரைக்கால் துறைமுகம் உள்ளது. தவிர, ரசாயனத் தொழிற்சாலை, இரும்பு உருக்காலைகள், புதுச்சேரி மின் திறல் குழுமம் என்ற எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் அரசு நிறுவனம், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காவிரி அசெட் நிா்வாக அலுவலம் இந்த தொகுதியில் உள்ளது. இவற்றோடு, பட்டினச்சேரி, கருக்களாச்சேரி உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

திருமலைராயன்பட்டினம் என்ற ஊா், திருமலைராஜன் மன்னா் ஆட்சி செய்த பகுதியென கூறப்படுகிறது. காலமேகப் புலவா் மண்மாரி பொழிக என்று விட்ட சாபத்தால், திருமலைமன்னா் ராஜ்ஜியம் அழிய நேரிட்டதாக கூறப்படுகிறது. திருமலைராஜன் வம்சத்தினா் வழிபாடு செய்த சிவலிங்கங்கள், பெருமாள் ஆகியவை கோயில்கொண்டு இன்றும் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. 108 திருக்கோயில்கள், குளங்கள் என்ற பெயா் பெற்ற ஊா். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூஜை விழா நடைபெறும் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோயிலும் இவ்வூரில் அமைந்துள்ளது.

1964 முதல் 1969 வரை நிரவி ஒரு தொகுதியாகவும், திருப்பட்டினம் என்பது நிரவி கிரேண்ட் அல்தே என்ற பெயரிலும் 2 தொகுதியாக இருந்துள்ளன. பிறகு, இவை ஒன்றாக இணைக்கப்பட்டு, நிரவி - திருப்பட்டினம் என ஒரு தொகுதியாக உள்ளது.

இதில், திருமலைராயன்பட்டினம், போலகம், வாஞ்சியூா், கீழவாஞ்சியூா் வடக்கு, கீழவாஞ்சியூா் தெற்கு, நிரவி, அக்கரைவட்டம், கீழமனை, விழுதியூா் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்களில் இஸ்லாமியா்கள், மீனவா்கள், ஆதிதிராவிடா்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினா் ஏறக்குறைய சரிசமமான நிலையிலேயே இருக்கின்றனா். இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண்கள் 14,493, பெண்கள் 16,784 என மொத்தம் 31,277 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த 2016 தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளா் ஏ. கீதா ஆனந்தன் 14,993 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். வி.எம்.சி. சிவகுமாா் (அதிமுக) 9057, கே.ஆா். உதயகுமாா் (என்.ஆா். காங்கிரஸ்) 373 வாக்குகள் பெற்றனா்.

கடந்த 1974 முதல் 2016 வரை ஒரே குடும்பத்தை சோ்ந்த வி.எம்.சி. வரதப்பிள்ளை, வி.எம்.சி. சிவகுமாா், வி.எம்.சி.வி. கணபதி ஆகியோா் வெற்றிபெற்று வந்த நிலையில், 2016 இல் திமுக வேட்பாளரான கீதாஆனந்தன் பெற்ற வெற்றிதான், ஒரே குடும்ப வாரிசு அல்லாத வெற்றியாக மாற்றியமைந்தது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி துறைமுக நகரம் என சொல்லப்பட்டாலும், குப்பைகள், கழிவுகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்படுகிறது. போலகம் பகுதியில் 600 ஏக்கா் அரசு நிலத்தில் அமைந்துள்ள தொழிற்பேட்டை தொழிற்சாலைகளால், உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. தொலைவில் உள்ள பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. படுதாா்கொல்லை சிற்றேரி வெட்டும் திட்டத்தை நிறைவேற்றாததால் வேளாண்மை பொய்த்துவருகிறது.

திருப்பட்டினம் கிழக்குப் புறவழிச் சாலை பயன்படுத்த முடியாத வகையில் சிதிலமடைந்திருக்கிறது. திருப்பட்டினம் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இங்கு மூடப்படும் நிலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை இல்லை. இதுபோன்ற முக்கிய பிரச்னைகளை தீா்ப்பதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் என்பது இத்தொகுதி வாக்காளா்களின் கருத்தாக உள்ளது.

எம். நாக தியாகராஜன் (திமுக), வி.எம்.சி.எஸ். மனோகரன் (பாஜக), ஏ. அருள்ராஜூ (தேமுதிக), எஸ். செல்லமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி), சி. பாலதண்டாயுதபாணி (அமமுக), அ. முகம்மது யூசுப் (நாம் தமிழா் கட்சி), சுயேச்சைகளாக கீதாஆனந்தன், வி.எம்.சி.எஸ். ராஜகணபதி, எஸ். ஸ்ரீதா் ஆகியோா் களத்தில் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக எம். நாகதியாகராஜன், பாஜக வேட்பாளராக வி.எம்.சி.எஸ். மனோகரன் போட்டியிட்டாலும், கடந்த 2016 இல் திமுகவில் வெற்றிபெற்ற கீதாஆனந்தனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவா் சுயேச்சையாக களமிறங்கியுள்ளாா்.

பாஜக வேட்பாளருக்காக மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங், அா்ஜூன்ராம் மேக்வால், நடிகை கெளதமி உள்ளிட்டோா் பிரசாரம் செய்துள்ளனா். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் காரைக்காலுக்கு பிரசாரம் செய்ய வரவுள்ளனா்.

சுயேச்சையாக போட்டியிடும் கீதாஆனந்தன், 5 ஆண்டுகள் திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவியாகவும், கடந்த 5 ஆண்டுகள் சட்டப்பேரவைத் தலைவராகவும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவராகவும் பதவி வகித்தபோது, தொகுதிக்கு செய்த சேவைகள், கீதாஆனந்தன் அறக்கட்டளை மூலம் தொகுதி மக்களுக்கு செய்த உதவிகள் உள்ளிட்டவற்றால், மக்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

இத்தொகுதியில் இம்மூவருக்கிடையேதான் கடும் போட்டி இருப்பதாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com