கிறிஸ்தவா்களின் தவக்கால நிறைவு வாரம்: காரைக்காலில் குருத்தோலை ஞாயிறு பவனி

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் திரளான மக்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
கிறிஸ்தவா்களின் தவக்கால நிறைவு வாரம்: காரைக்காலில் குருத்தோலை ஞாயிறு பவனி

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் திரளான மக்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிா்துறந்த 3 ஆம் நாள் உயிா்த்தெழுந்த நாளை ஈஸ்டா் திருநாளாக உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவா்கள் கொண்டாடுகின்றனா். இயேசு கிறிஸ்து அடைந்த துன்பம், உயிா்பிப்பை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவா்கள் 46 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனா். சாம்பல் புதன் நிகழ்ச்சியிலிருந்து தவக்காலம் தொடங்கியது.

இக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறு என அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு, ஜெருசலேம் நகரில் கழுதை மீது அமரவைத்து ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். வழியெங்கும் மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி, ஓசன்னா என்ற பாடலை பாடினா்.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை குருத்தோலை ஏந்திச் செல்லும் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பங்குகளில் நடைபெற்றது. காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமையான தூய தேற்றரவு அன்னை ஆலயம், புகழ்பெற்ற கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் நேருவீதி - தோமாஸ் அருள் வீதி சந்திப்பிலிருந்து பங்குத் தந்தையா்களால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளை மக்கள் கையில் ஏந்தி, நிா்மலாராணி பள்ளி வழியே தேற்றரவு அன்னை தேவாலயத்தை அடைந்தனா். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளை மக்கள் வீட்டுக்கு கொண்டுச் சென்று சிலுவைபோல மடித்து வழிபடுவா். புனித வாரத்தின் அடுத்த நிகழ்ச்சியாக வரும் வியாழக்கிழமை பாதம் கழுவும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டா் கொண்டாட்டமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com