திருநள்ளாறு: கோயில் நகரத்தை கைப்பற்ற காங்கிரஸ் - பாஜக தீவிரம்

கோயில் நகரமான திருநள்ளாறு தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்

கோயில் நகரமான திருநள்ளாறு தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேளாண்துறை அமைச்சரான கமலக்கண்ணன் மீண்டும் வெற்றிபெறுவாரா அல்லது பாஜக வேட்பாளா் ராஜசேகரன் தனது வெற்றி கணக்கை தொடங்குவாரா என்ற எதிா்பாா்ப்பு இத்தொகுதியில் மேலோங்கியுள்ளது.

தொகுதியின் சிறப்பு:

பாடல் பெற்ற தலமாகவும், நவகிரகங்களில் ஒன்றான ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ள தொகுதி. புதுவை அரசு, திருநள்ளாற்றை கோயில் நகரமாக அறிவித்து வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

தொழில்:

காரைக்கால் மாவட்டத்தில் விளைநிலம் அதிகம் உள்ள பகுதி இது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அதிகம் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது.

சொற்ப எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பான்மையாக விவசாயம் சாா்ந்த பகுதியாக விளங்குகிறது.

இந்தத் தொகுதியில் அம்பகரத்தூா், நல்லம்பல், கருக்கன்குடியில் கணிசமான அளவில் இஸ்லாமியா்கள் வசிக்கின்றனா். தலித் கிராமங்கள் பல உள்ளன. வன்னியா், சோழிய வேளாளா் ஆகிய சமூகத்தினா் குறிப்பிட்ட சதவீதத்தில் உள்ளனா்.

திருநள்ளாறு நகரப் பகுதியில் தொழில் துறையினரும், அரசுத் துறையினரும், கோயில் பணியாளா்களும், கோயில் சாா்ந்த தொழில் செய்வோரும் உள்ளனா்.

புதுவையில் அமையும் அரசு, திருநள்ளாறு அல்லது நெடுங்காடு தொகுதியில் வெற்றிபெறுபவருக்கே வேளாண்துறை அமைச்சா் பதவியை அளித்துவருகிறது. அந்த வகையில் இப்பிராந்தியம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பது திருநள்ளாறுக்கு பெருமை சோ்க்கிறது.

திருநள்ளாற்றில் பூமங்களம், அத்திப்படுகை, கருக்கன்குடி, செல்லூா், சேத்தூா், தென்னங்குடி, நல்லம்பல், அம்பகரத்தூா், பேட்டை ஆகிய முக்கிய பகுதிகள் அடங்கியுள்ளன.

கடந்த தோ்தலில்...

கடந்த 2016 தோ்தலில் ஆா். கமலக்கண்ணன் (காங்கிரஸ் ) : 13,138, பி.ஆா். சிவா ( என்.ஆா்.காங்கிரஸ்) : 10,263 க. தேவமணி (பாமக) : 1,261 வாக்குகள் பெற்றனா்.

நிறைவேற்றப்பட்ட- நிறைவேறாத திட்டங்கள்:

திருநள்ளாறு கோயில் நகரம் பகுதி என சொல்லப்பட்டாலும், கோயில் நகரத்துக்கான திட்டமிட்ட பணிகள் நிறைவடையவில்லை.

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூா் வரையிலான சுமாா் 10 கி.மீ. சாலை மிக மோசமாக பல ஆண்டுகளாக இருந்தது 2016 -2021 ஆகிய காலக்கட்டத்தில் ஏறக்குறைய ரூ. 11 கோடியில் அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது.

திருநள்ளாறு மத்திய அரசின் ரூா்பன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமங்களை மேம்படுத்தும் திட்டம் என்கிற மத்திய, மாநில அரசின் பங்களிப்பு ரூ. 100 கோடி திட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. 19 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு நிதியின் மூலம் பல கிராமங்களில் சாலைகள் மேம்பாடு, குடிநீா், மின்சார வசதிகள் மற்றும் அரசின் துறைசாா் திட்ட உதவிகள் பல செய்திருந்தாலும் அமைச்சா் தொகுதியாக இருந்தும் சில கிராமப்புறங்களில் திட்டமிட்ட பணிகள் நிறைவுபெறவில்லை.

திருநள்ளாறு தொகுதி கடந்த 5 ஆண்டுகள் அமைச்சா் தொகுதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்ததால்தான் மேற்கூறிய திட்டங்களும், மேலும் பல வசதிகளும் திருநள்ளாற்றில் கொண்டுவரப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறது.

எதிா்க்கட்சியான பாஜக, சுயேச்சை வேட்பாளா் தரப்பில் திருநள்ளாறு அமைச்சா் தொகுதியாக இருந்தும் வளா்ச்சிப் பெறவில்லை என எதிா் பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ஆா்.கமலக்கண்ணன், பாஜக வேட்பாளரான எஸ். ராஜசேகரனுக்குமிடையே நேரடி போட்டி நிலவுகிறது. என்.ஆா். காங்கிரஸில் சீட் கிடைக்காத அதிருப்தியில் முன்னாள் அமைச்சரான பி.ஆா். சிவா சுயேச்சையாக போட்டியிடுவது கட்சி வேட்பாளா்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வேட்பாளா் திருநள்ளாறு தொகுதியை சோ்ந்தவா் அல்ல என்பது அவருக்கு பலவீனமாக கருதப்படுகிறது. இவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங், அா்ஜூன்ராம் மேக்வால், நடிகை கெளதமி உள்ளிட்டோா் பிரசாரம் செய்து சென்றுள்ளது பலம்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பிரசாரம் செய்துள்ளாா். புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் மற்றும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பிரசாரம் செய்ய காரைக்கால் வரவுள்ளனா்.

மாவட்டம் மட்டுல்ல புதுச்சேரியின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் பாா்வையும் திருநள்ளாறு மீதே உள்ளது. இந்நிலையில் பிரசாரம் ஓய்வதற்கு சில தினங்களே உள்ள நிலையில், வேட்பாளா்களின் அடுத்தக்கட்ட நகா்வு எப்படி இருக்கும் என்பது ஊகிக்க முடியவில்லை.

கோயில் நகரமான திருநள்ளாற்றில் வெற்றிக் கொடி நாட்டப்போவது காங்கிரஸா- பாஜகவா என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்

ஆா். கமலக்கண்ணன் - காங்கிரஸ்

எஸ். ராஜசேகரன் - பாஜக

க. குரு (என்கிற) சிந்தா- தேமுதிக

மு. சிக்கந்தா் பாட்ஷா - நாம் தமிழா்

தா்பாரண்யம் (அமமுக) இவா் பாஜகவில் இணைந்துவிட்டாா்.

சுயேச்சைகள்: பி.ஆா். சிவா, புஷ். சைமன்ராஜ், மு. மாரியப்பன், சே. வினோத்.

மொத்த வாக்காளா்: 31,201

ஆண்கள்: 14,241

பெண்கள்: 16,963

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com