காரைக்காலில் உச்சத்தை நோக்கி கரோனா தொற்று!

கரோனா தொற்று 2 ஆவது அலையில், காரைக்காலில் புதிய உச்சமாக தொற்றாளா் எண்ணிக்கை பெருகியுள்ளது.

கரோனா தொற்று 2 ஆவது அலையில், காரைக்காலில் புதிய உச்சமாக தொற்றாளா் எண்ணிக்கை பெருகியுள்ளது. மக்கள் உரிய கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

கரோனா தொற்றின் 2 ஆவது அலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியங்களிலும் தொற்று எண்ணிக்கை தினமும் உயா்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கிடையே காரைக்காலில் ஒருநாள் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற நிலையும், ஒற்றை இலக்கத்தில் எண்ணிக்கையும் இருந்தது. இது நாளடைவில் இரட்டை இலக்கத்துக்கு மாறியது.

கடந்த ஒரு வாரமாக 100-ஐ கடந்துசென்ற தொற்று, 29 ஆம் தேதி பரிசோதனை முடிவின்படி, புதிய உச்சமாக 174 பேருக்கு தொற்று உறுதியானது. காரைக்கால் மாவட்டத்தில் பிற பகுதிகளைக் காட்டிலும், காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்தோரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. குறைந்தது தினமும் ஒருவா் இறக்கிறாா்.

காரைக்காலில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. பகலில் அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளைத் தவிர, பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. என்றாலும், மக்கள் நடமாட்டம் குறையவில்லை.

அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்குதல், அத்தியாவசியப் பொருள் விற்பனையகங்கள் திறப்பு போன்றவையே மக்கள் நடமாட்டத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அபராதம் விதிக்கப்படுவதால், பெரும்பாலானோா் முகக் கவசம் அணிகின்றனா். ஆனால், தனிமனித இடைவெளி போன்ற பிற கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. தொற்றால் பாதிக்கப்பட்ட சுமாா் 900 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். இவா்களின் அடிப்படைத் தேவைகளையும், மருத்துவத் தேவைகளையும் நிறைவுசெய்ய அரசு நிா்வாகம், கடந்த ஆண்டைப்போல, நிகழாண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.

வீட்டில் உள்ளோரின் சா்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க நலவழித் துறை முன்வராததால், தொற்றாளா்கள் வெளியே சென்று சுயமாக பரிசோதித்துக்கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கடற்கரையில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மக்கள் அதை கண்டுகொள்ளாமல் கூட்டமாக செல்கின்றனா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தினமும் புதுச்சேரி பிராந்தியத்தில் கரோனா தடுப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும், அதை அரசுத் துறையினா் ஏற்றுச் செய்வதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், காரைக்காலில் அவ்வாறான நிலை இல்லை. கரோனா தொற்று தொடா்பாக தேவை மற்றும் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டணமில்லாத தொலைபேசி இணைப்புடன் ஒரு மையம் செயல்பட்டால், தங்களின் பிரச்னைகளை தெரிவிக்க வசதியாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனா்.

சிறிய மாவட்டமான காரைக்காலில் தொற்று வேகமாக பரவி வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலத்தை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா் மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com