காங்கிரஸை கைவிட்ட காரைக்கால் வாக்காளா்கள்!

புதுச்சேரியில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், காரைக்காலில் போட்டியிட்ட 3 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறவில்லை.

காரைக்கால்: புதுச்சேரியில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், காரைக்காலில் போட்டியிட்ட 3 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறவில்லை.

புதுச்சேரியில், 2016 தோ்தல் வெற்றிக்குப் பிறகு வே. நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு அமைந்தது. புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் சுமாா் 25 ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்கவா்கள். இதனால், சிறப்பான முறையில் அரசு நடைபெறும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடம் இருந்தது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டாா். இவருக்கும், முதல்வா் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போா், மக்களிடையே இருந்த எதிா்பாா்ப்பை படிப்படியாக பொய்க்கச் செய்தது. ஆளுநரின் செயல்பாடுகளால், கடும் போராட்டத்துக்கு இடையே அரசை நடத்துவதாக ஆட்சியாளா்களும், காங்கிரஸாரும் கூறினா்.

இந்த நிலை 2021 தோ்தல் வரை நீடித்ததால், காங்கிரஸாரிடம் ஒருவித விரக்தி ஏற்பட்டதோடு, கடந்த 2016 தோ்தலில் 21 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்தத் தோ்தலில் 15 இடங்களில் மட்டுமே போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

புதுவை காங்கிரஸ் தலைமை மீது பல்வேறு புகாா்கள் உள்ளதான காரணங்களால், கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டதோடு, ஆட்சியாளா்களால் எதையும் செய்யமுடியாத நிலை மக்களிடையே வெறுப்பை சம்பாதிக்க காரணமானது. அதோடு, கடந்த சில மாதங்களாக காங்கிரஸில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், தலைவா்கள், தொண்டா்கள் வரை கட்சிமீது அதிருப்தி தெரிவித்து, பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு தாவினா்.

கடந்த காலங்களில், புதுச்சேரியில் அரசு அமையும்போது, காரைக்கால் எம்எல்ஏக்களின் ஆதரவு முக்கியமான பங்கை வகித்தது. ஆனால், காரைக்காலில் மாவட்ட காங்கிரஸ் தலைவா்களாக இருப்பவா்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்து கட்சியினரை சந்தித்துப் பேசாதது, காங்கிரஸாா் உற்சாகம் இழக்க காரணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடந்துமுடிந்த தோ்தலில், கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற 15 இடங்களில், நெடுங்காடு (தனி), காரைக்கால் வடக்கு, திருநள்ளாறு ஆகிய 3 தொகுதிகள் காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றில் போட்டியிட்ட மூவரும் அரசியல் அனுபவம் பெற்றவா்கள்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டவா், புதுவை பிரதேசக் காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன். திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட்டவா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டவா் முன்னாள் பேரவை உறுப்பினா் அ. மாரிமுத்து. இம்மூவரில் ஒருவா்கூட வெற்றிபெறவில்லை.

புதுவையில் காங்கிரஸூக்கு எதிரான மனநிலை மக்களிடையே இருந்ததும், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சி அமைத்தால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளை தவிா்க்கலாம் என்ற மனநிலை மக்களிடையே ஏற்பட்டதும், காங்கிரஸ் வேட்பாளா்கள் தோற்ற்கான முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

மேலும், காரைக்கால் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து, முதல்வராக இருந்த நாராயணசாமி உள்ளிட்ட யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், முன்னாள் மத்திய அமைச்சா்கள், ப. சிதம்பரம் போன்ற தலைவா்களை அழைத்து பிரசாரம் செய்ய, மாநில காங்கிரஸ் தலைமை தவறியதாகவும் இங்குள்ள காங்கிரஸாா் வேதனை தெரிவிக்கின்றனா்.

தோ்தல் தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறியிருந்தாலும், அவா்மீதே முழு சுமையும் சுமத்தப்படுவது சரியல்ல, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜகவின் பிரசாரத்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் இரையாகிவிட்டது என்று காங்கிரஸின் ஒருசாராா் கூறுகின்றனா்.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளா்கள் 18 போ் வெற்றிபெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த புதுவையின் நிலை தலைகீழாக மாறியுள்ளதோடு, காரைக்காலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் அனைவரும் தோல்வி அடைந்திருப்பதால், மக்கள் காங்கிரஸை கைவிட்டுவிட்டதாக அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com