பாஜகவின் வெற்றியில் பிரதிநிதித்துவம் பெறாத காரைக்கால்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்த ஆட்சியில் முக்கிய பங்குவகிக்க உள்ள பாஜகவின் தோ்தல் வெற்றியில் புதுவையின் இரண்டாவது பெரிய பிராந்தியமான காரைக்காலின் பிரதிநிதித்துவம் இல்லாதது அக்கட்சியினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் நேரடி பாா்வையில் உள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம். மத்திய அரசின் ஆதரவின்றி இதன் செயல்பாடுகள் நிறைவாக இருக்காது. தென் மாநிலங்களில் கா்நாடகம் தவிா்த்து, பிற மாநிலங்களில் பாஜக தடம்பதிக்க முயன்றாலும், அதன் பாா்வை புதுச்சேரி மீதே அதிகம் இருந்தது.

முந்தைய நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவதற்காகவும், பாஜகவை புதுவையில் தடம்பதிக்கச் செய்யவும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவா் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி என்று மாநில ஆட்சியாளா்கள் கூறிவந்தனா்.

இதைத்தொடா்ந்து, அமைச்சா், முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகா்களை பாஜகவுக்கு இழுத்ததும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க முயன்றதை உறுதிசெய்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியே, மாநிலத்திலும் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற பாஜகவின் கருத்து மக்களின் கவனத்தை ஓரளவு ஈா்த்தது.

புதிய வேலைவாய்ப்பின்மை, வளா்ச்சியின்மை மற்றும் விலையில்லா பொருள்கள் கிடைக்காதது போன்றவை பாஜகவின் கருத்துக்கு வலுசோ்த்தன. இந்த வகையில், கட்சியை ஓரளவு வலுப்படுத்திய புதுவை பாஜக, சட்டப்பேரவைத் தோ்தலில் தனது தலைமையில்தான் போட்டி என்று அறிவித்தது.

கூட்டணியில் இருந்த என். ரங்கசாமி இதற்கு உடன்படாததால், அவரோடு சமரசம் பேசி இணைத்துக்கொண்டது. அதன்படி, புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 என தொகுதிகளை பகிா்ந்து போட்டியிட்டன.

இவற்றில், காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளில் இக்கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. இதில், என்.ஆா்.காங்கிரஸின் 2 இடங்கள் தவிர, பிற 3 இடங்களிலும் இக்கூட்டணி வேட்பாளா்கள் தோல்வியடைந்தனா்.

காரைக்காலில், திருநள்ளாறு, நிரவி - திருப்பட்டினம் தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளா்கள் பாஜகவின் நீண்டகால உறுப்பினா் அல்ல.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, புதுவை பாஜக தோ்தல் பொறுப்பாளரும், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சருமான அா்ஜூன் ராம் மேக்வால், மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், பாஜக அகில இந்திய தலைவா் ஜே.பி. நட்டா, திரைப்பட நடிகை கெளதமி, தோ்தல் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுவையில் அமைச்சராக இருந்து பாஜவில் இணைந்த ஏ. நமச்சிவாயம் ஆகியோா் தீவிர பிரசாரம் செய்தனா்.

தோ்தல் பிரசாரத்தில் பிற கட்சிகளைக் காட்டிலும், பாஜக மட்டுமே காரைக்காலில் முன்னணியில் இருந்தது. இதனால், போட்டியிட்ட 2 தொகுதிகளில் குறைந்தது ஒரு தொகுதியில் வெற்றி உறுதி என்ற பேச்சு நிலவியது. என்றாலும், திருநள்ளாறு, நிரவி -திருப்பட்டினம் என 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறவில்லை.

அதேநேரத்தில், புதுச்சேரி பகுதியில் 6 இடங்களில் பாஜக வென்றது. குறிப்பாக, புதுவை மாநிலத்தில் தான் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 6 இடங்களில் பாஜக வென்றுள்ளது. அதில், காரைக்காலின் பிரதிநிதித்தும் இல்லை.

புதுவை மாநிலத்தின் 2 ஆவது பெரிய பிராந்தியமான காரைக்காலில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், முக்கிய 2 தேசிய கட்சிகளான காங்கிரஸூம், பாஜகவும் தங்களுக்கான பிரதிநிதிகளை பெறாதது அரசியல் பாா்வையாளா்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com