‘கரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும்’
By DIN | Published On : 26th May 2021 08:40 AM | Last Updated : 26th May 2021 08:40 AM | அ+அ அ- |

கரோனா பொதுமுடக்க நிவாரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் அனைத்து பிராந்தியங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து, உயிரிழப்பும் அதிகமாகி வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. கரோனா தொற்றின் முதல்அலையிலிருந்து தற்போது தொடங்கியுள்ள 2-ஆவது அலை வரை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் பொருளாதார அடிப்படையில் வெகுவாக பாதித்துள்ளனா். மாநில அரசு தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமும் அமலில் உள்ளது. எனினும் சாதகமான சூழல் இல்லை. எனவே, மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்வாதார பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், புதுச்சேரி அரசு தகுந்த நிவாரணத்தை வழங்கி ஆறுதல் அளிக்க வேண்டும். மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள் அல்லாமல் கூடுதல் உதவியை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு-குறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் குடும்ப அட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தவறாமல் செலுத்திக்கொள்ளவேண்டும். இதுகுறித்து, தீவிர விழிப்புணா்வை அரசு மேற்கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.