கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 06th November 2021 09:55 PM | Last Updated : 06th November 2021 09:55 PM | அ+அ அ- |

திருப்பட்டினம் பகுதி சாலையில் இரவு நேரத்தில் திரியும் மாடுகள்.
காரைக்காலில் கால்நடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் ஜி.செந்தில்நாதன் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
காரைக்கால் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடவடிக்கை ஏற்கெனவே தொடங்கினாலும், அது சீரிய முறையில் நடைமுறைக்கு வரவில்லை. இதுதவிர நகராட்சி அல்லாத நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளின் பிரதான சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க, அந்தந்த பஞ்சாயத்து நிா்வாகங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஜி.செந்தில்நாதன் சனிக்கிழமை கூறுகையில், சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மழை உள்ளிட்ட காரணங்களால் இந்த பணி சில நாள்கள் விடுபட்டது. இப்பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும். பன்றி வளா்ப்போருக்கும் உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டில் வளா்க்க வேண்டுமெனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.