காரைக்கால் சந்தையில் காய்கறிகள் விலையேற்றம்

காரைக்கால் வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
காரைக்கால் வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி.
காரைக்கால் வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி.

காரைக்கால் வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி உள்ளிட்ட காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பால் விலையும் உயரத்தொடங்கியது. காரைக்கால் வாரச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனையானது.

இதேபோல, வெங்காயம், அவரைக்காய், பீன்ஸ், சவ்சவ் ஆகியவை கிலோ ரூ. 60, பீட்ரூட் ரூ. 40, பாகற்காய், கேரட், பூண்டு ஆகியவை கிலோ ரூ. 80 என அனைத்து காய்கறிகளும் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காரைக்காலில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருக்கும் என்பதால், ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த வாரம் தக்காளி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது. கிலோ ரூ. 10-க்கு வாங்கிய தக்காளியை இப்போது ரூ. 100-க்கு வாங்கவேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் இருமடங்காக உயா்ந்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ. 300-க்கு வாங்கிய காய்கறிகளை ரூ. 600-க்கு வாங்கும் சூழல் உள்ளது. இந்த விலை எப்போது கட்டுக்குள் வரும் என தெரியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவை மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் வரத்தும் மிகக் குறைவாகவே உள்ளது. காய்கறிகளின் விலை உயா்வால் வாரச்சந்தையில் கடைகள் குறைவாகவே உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com