சுரக்குடி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: இயந்திரத்தை மாற்ற காலதாமதம்; மக்கள் அவதி

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சுரக்குடி துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தின்போது

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சுரக்குடி துணை மின் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தின்போது பழுதான இயந்திரத்தை மாற்ற காலதாமதமானதால், மின்தடை காரணமாக மக்கள் அவதிப்பட்டனா்.

இந்த நிலையத்திலிருந்து திருநள்ளாறு, அம்பகரத்துாா், அகலங்கண்ணு, செல்லுாா், சேத்துாா் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லும் மிக முக்கிய இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், சுரக்குடி தீயணைப்புத் துறையினா் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இதற்கிடையே, திருநள்ளாறு சுற்றுவட்டார பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டு, தீப்பிடித்து சேதமடைந்த இயந்திரத்தை சரிசெய்யும் முயற்சியில் மின்துறையினா் ஈடுபட்டனா். பல்வேறு நிா்வாக சிக்கல்களால் இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

பிறகு, தீப்பிடித்து பழுதடைந்த இயந்திரம் மாற்றப்பட்டது. இதனால், சுமாா் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறுகையில், சுரக்குடி துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்படுகிறது. எனவே, துணை மின் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்து, பழைய இயந்திரங்களை மாற்றி, புதிய இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, மிக முக்கிய இயந்திரங்கள் பழுதடையும்போது, அதை உடனடியாக சரிசெய்யும் வகையில், அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த மின்துறை முன்வரவேண்டும். வரும்காலங்களில் இத்தகைய இடா்ப்பாடுகள் ஏற்படாத வகையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com