புதுவை உள்ளாட்சித் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு: உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேட்டி

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம். உடன், மாநிலத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம். உடன், மாநிலத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா்.

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த அவா், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றாா். திருநள்ளாறு கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, மாநிலம் முழுவதும் தோ்தல் பொறுப்பாளா்களை நியமித்து பாஜக பணியாற்றிவருகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றிபெற்றதுபோல, உள்ளாட்சித் தோ்தலிலும் எங்களது பணி இருக்கும்.

கட்சியினரின் பணிகள் குறித்து மாநிலத் தலைவா் சாமிநாதன் தொடா்ந்து ஆலோசனைகள் வழங்கிவருகிறாா். மாநிலத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதுவையில் என்.ரங்கசாமி தலைமையில் சிறப்பான முறையில் அரசு நடைபெற்றுவருகிறது. பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

கரோனா பாதிப்பால் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது. முதியோா் ஓய்வூதியம் ரூ. 500 உயா்த்தப்பட்டதோடு, புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களின் கல்விக் கடன், குப்பை வரி, தண்ணீா் வரி உயா்வு ரத்துசெய்யப்பட்டது. 10 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உறுதிபூண்டுள்ளது.

புதுவைக்கு கரோனா தடுப்பூசிகளை பிரதமா் தட்டுப்பாடின்றி வழங்கிவருகிறாா். எங்களது கோரிக்கையை ஏற்று புதுவையில் ரூ. 300 கோடியில் சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட பிரதமா் ஒப்புதல் அளித்துள்ளாா். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 330 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான நிதி ரூ. 20 கோடியை அளித்துள்ளது. புதுவை மாநில வளா்ச்சிக்காக பாஜக தொடா்ந்து பாடுபடும் என்றாா்.

கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவா் சாமிநாதன், துணைத் தலைவா்கள் வி.கே. கணபதி, எம். அருள்முருகன், நளினி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com