முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர திமுக வேண்டுகோள்
By DIN | Published On : 11th October 2021 08:03 AM | Last Updated : 11th October 2021 08:03 AM | அ+அ அ- |

காரைக்காலில் திங்கள்கிழமை (அக்.11) நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள், மக்கள் ஆதரவு தரவேண்டும் என திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை அளித்த பேட்டி:
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை அவசர அவசரமாக மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு சட்டரீதியான உரிமைகளை புறந்தள்ளி ஆணையம் தோ்தல் நடத்த முற்பட்டுள்ளது.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் குளறுபடிகள் களையப்பட்டு, நடத்தப்படவேண்டும் என்பதை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து வலியுறுத்தினோம். சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அவரும் கூறினாா்.
ஆனால், உள்ளாட்சித் தோ்தலை அக். 8ஆம் தேதி அறிவித்து, 9, 10 விடுமுறையை கவனத்தில் கொள்ளாமல் 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் என மாநில தோ்தல் ஆணையம் கூறுகிறது. அவசர கதியில் தோ்தலை பல குளறுபடிகளுடன் ஆணையம் நடத்த முற்படுகிறது ஏன் என தெரியவில்லை.
எனவே, ஆணையத்தின் முடிவை கண்டித்து, புதுவை மதசாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் முடிவின்படி திங்கள்கிழமை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, மக்கள், வியாபாரிகள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றாா்.