கோயில்களில் திருட்டு: நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd September 2021 09:14 AM | Last Updated : 23rd September 2021 09:14 AM | அ+அ அ- |

காரைக்கால் பகுதி கோயில்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் பின்பக்க கதவை திறந்து உண்டியல் திருடப்பட்டுள்ளது. இதில் ரூ. 10 ஆயிரம் அளவுக்கு ரொக்கம் திருடு போயிருக்கலாம் என காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல கருக்களாச்சேரி ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயிலிலும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காரைக்கால் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ், செயலா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகனை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், கோயில்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்கவேண்டும். காரைக்கால் நகரம் மற்றும் பிற பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.