முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
சிவலோகநாத சுவாமி சாா்பு கோயில்களில் குடமுழுக்கு
By DIN | Published On : 29th April 2022 09:37 PM | Last Updated : 29th April 2022 09:37 PM | அ+அ அ- |

முள்ளியம்மன் கோயில் விமான கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா்.
காரைக்கால் சிவலோகநாத சுவாமி சாா்பு கோயில்களில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில், புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயில் சாா்புடையதாக செல்வ விநாயகா், பிடாரி அம்மன், முள்ளியம்மன், விஜய வலம்புரி விநாயகா் மற்றும் தங்க மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல்கட்டமாக சாா்பு கோயில்களான செல்வ விநாயகா், பிடாரி அம்மன், முள்ளியம்மன், விஜய வலம்புரி விநாயகா் ஆகிய கோயில்களில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, 4 கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கி 4-ஆம் கால பூஜை வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்து 8.30 முதல் 10 மணிக்குள்ளாக கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டது.
விழாவில் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், கோயில் அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மே 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவலோகநாதசுவாமி கோயில் மற்றும் 9.45 மணிக்கு தங்க மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது.