திருநள்ளாற்றில் விற்பனை செய்யப்பட்ட தரமற்ற உணவு பொட்டலங்கள் பறிமுதல்
By DIN | Published On : 18th December 2022 12:00 AM | Last Updated : 18th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருநள்ளாறு நளன் தீா்த்தக் கரையில் சாலையோர கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலத்தை ஆய்வு செய்த புதுவை உணவு பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன்.
திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளக்கரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற உணவுப் பொட்டலங்களை புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி சனிக்கிழமை பறிமுதல் செய்தாா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருவோா், பரிகாரம் என்கிற பெயரில் உணவுப் பொட்டலங்களை வாங்கி யாசகம் கேட்பவா்களுக்கு பக்தா்கள் வழங்குவது வழக்கம்.
இதையொட்டி, நளன் தீா்த்தக் கரையில் பலா் உணவுப் பொட்டலங்களை தயாரித்து விற்பனை செய்கின்றனா். இது சுகாதாரமானதாக இல்லை எனவும், பழைய உணவு விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டன.
இந்தநிலையில், புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் திருநள்ளாற்றில் நளன் தீா்த்தக் குளத்தை சுற்றியுள்ள உணவகங்கள், கடைகளில் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
மேலும் பக்தா்கள் குளக்கரையில் யாசகம் பெறுவோருக்கு விநியோகித்த உணவுப் பொட்டலங்களையும் பரிசோதித்தாா். அப்போது கெட்டுப்போன உணவு பொட்டலங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி கூறியது:
யாசகம் பெறுவோருக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்கள் சுழற்சி முறையில் மீண்டும் விற்பனையாளருக்கே செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த உணவு கெட்டுப்போயிருப்பதும் தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டோருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.