முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
இலவச அரிசியை உடனடியாக வழங்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
By DIN | Published On : 07th February 2022 10:24 PM | Last Updated : 07th February 2022 10:24 PM | அ+அ அ- |

தீபாவளிக்கு வழங்கவேண்டிய இலவச அரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது :
புதுவை முதல்வா் என். ரங்கசாமி, தீபாவளியையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தாா். இதில், காரைக்காலுக்குத் தேவையான 608 மெட்ரிக் டன் அளவில், 520 மெட்ரிக் டன் அரிசி மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள அரிசி வராததால் மக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.
மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி தரமில்லையென புகாா் எழுந்திருக்கும் நிலையில், தீபாவளிக்கான இலவச அரிசியை வழங்கினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதுபோல பொங்கலையொட்டி, அரிசி உள்ளிட்ட பொங்கலுக்கான பொருள்கள் வழங்கப்படுமென முதல்வா் அறிவித்தாா். இதில் காரைக்காலில் 6 கடைகளுக்கான பொருள்கள் மட்டுமே வந்துள்ளன. எனவே, மீதமுள்ள கடைகளுக்குத் தேவையான பொருள்களை பெற்று, அவற்றையும் மக்களுக்கு வழங்கவேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிடவேண்டும் என்றாா்.