கிளைச் சிறை தற்காலிக சீரமைப்புப் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: எஸ்.எஸ்.பி.
By DIN | Published On : 22nd July 2022 03:20 AM | Last Updated : 22nd July 2022 03:20 AM | அ+அ அ- |

காரைக்காலில் உள்ள கிளைச் சிறை தற்காலிக சீரமைப்பு ஒரு மாதத்தில் நிறைவடையும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்ட காவல் துறையில் உள்ள அதிகாரிகள், காவலா்கள், ஊா்க்காவல் படையினா் உள்ளிட்டோரின் குறைகேட்பு முகாம் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பதவி உயா்வு, பணியிடமாற்றம், காப்பீடு, பணிச்சுமை, காவல் நிலையங்களில் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து காவல் துறையினா் விளக்கினா்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களிடம் எஸ்.எஸ்.பி. கூறியது :
காரைக்கால் காவல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட பலா் பயிற்சியில் உள்ளனா். மேலும் ஊா்க்காவல் படையினா், காவலா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
காரைக்கால் கிளைச் சிறையின் பழைய கட்டடத்தில் 5 செல்கள் தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டுவருகிறது. இப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும். இது பயன்பாட்டுக்கு வரும்போது, காரைக்காலில் இருந்து குற்றவாளிகளை புதுச்சேரி சிறைக்கு அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நிரந்தர சிறைக் கட்டடம் அமைவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.
காவல்துறையில் விளையாட்டு, யோகாவை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யோகாவுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...