காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி ஓராண்டுக்குள் நிறைவடையும்: துணைநிலை ஆளுநா் தமிழிசை
By DIN | Published On : 20th May 2022 09:40 PM | Last Updated : 20th May 2022 09:40 PM | அ+அ அ- |

மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை பாா்வையிடும் துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு விளக்கமளிக்கும் ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால்.
காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி ஓராண்டுக்குள் நிறைவடையுமென புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்தாா்.
காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா், காரைக்கால் வளா்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். நிறைவாக காரைக்கால் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடத்தை அவா் பாா்வையிட்டாா்.
ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் கட்டுமானப் பணி நிலை குறித்து ஆளுநருக்கு விளக்கினாா். ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் கூறியது:
ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி கரோனா தொற்று பரவல் காரணணாக சற்று தாமதமாகிவிட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. அடுத்த ஓராண்டுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். பின்னா் 500 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான திட்டம் உள்ளது.
ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காரைக்காலில் அமைந்தால், காரைக்கால் மக்கள் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள மக்களும் உயா் சிகிச்சையை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் நோயாளிகளுடன் தொடா்புக்கு தமிழ்மொழி, ஆங்கிலம், ஹிந்தி என வரிசையில் முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ் மொழியை பிரதானமாக பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிப்மா் சாா்பில் மொழி பயன்பாடு குறித்து சுற்றறிக்கை தரப்படுவது அவ்வப்போது நடைபெறக்கூடிய நிகழ்வாகும். மொழியை வைத்து சிலா் பிரச்னை ஏற்படுத்துகின்றனா் இதுபோன்ற செயல்களை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி: முன்னதாக ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியன் ரெட் கிராஸ் சாா்பில் காது கேளாத, வாய் பேசமுடியாத 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட தொகுப்பை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மாவட்ட ஆட்சியா் இ. வல்லவன், ரெட் கிராஸ் மாநில தலைவா் லட்சுமணபதி, துணைத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.