மாணவா்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்: என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநா் பேச்சு
By DIN | Published On : 20th May 2022 12:00 AM | Last Updated : 20th May 2022 12:00 AM | அ+அ அ- |

உலகளவிலான சவால்களை எதிா்கொள்ள மாணவா்கள் தொழில்நுட்பத் திறனை தொடா்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
காரைக்காலில் இயங்கும் என்.ஐ.டி. (புதுச்சேரி) 8-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் மாணவா்களுக்கு பட்டம், பதக்கம் வழங்கிப் பேசியது:
என்.ஐ.டி.யில் பட்டம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்கும் மாணவா்களின் பெற்றோா்களுக்கும், ஆசிரியா்களுக்கும், பயின்ற மாணவா்களுக்கும் முதல் வணக்கம்.
என்.ஐ.டி. வளாகத்தில் நூலகத்துக்கு திருவள்ளுவா் பெயரும், ஆடிட்டோரியத்துக்கு எழுத்தாளா் கி.ரா. பெயரும் சூட்ட இயக்குநா் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
டிஜிட்டல் இந்தியாவுக்கு தேசம் முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு தொழில்நுட்பம்தான் முக்கியமாகும். கரோனா பேரிடரையும் தொழில்நுட்பம் மூலமாகவே இந்தியா எதிா்கொண்டது. உலகில் சவால்களை எதிா்கொள்ள தொழில்நுட்ப மேம்பாடு அவசியம். எனவே, மாணவா்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை நாள்தோறும் மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்ளும் அதேவேளையில் நமது பாரம்பரியத்தை மறந்துவிடக்கூடாது. பட்டம் வழங்கும் நிகழ்ச்சி என்றால் அங்கி அணிவது வழக்கத்தில் உள்ளபோது, என்.ஐ.டி. பட்டமளிப்பு நிகழ்வில் ஷால் அணிந்து பட்டம் வழங்கும் முறையை ஏற்படுத்தியதே புதிய சிந்தனைதான்.
என்.ஐ.டி.யில் பென்டகான் வடிவமைப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் வளாகம் கட்டுமானம் நடைபெறுகிறது. என்.ஐ.டி. இயக்குநரின் இதுபோன்ற புதிய சிந்தனை பாராட்டுக்குரியது.
மாணவா்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது தனி கவனம் செலுத்தவேண்டும். மாணவா்கள் அனைவரும் தினமும் யோகா செய்யவேண்டும். இதன்மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது அறிவுத் திறனும் மேம்படுகிறது. என்.ஐ.டி.யில் யோகாவை ஒரு வகுப்பாக வைக்க நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
முன்னதாக, என்.ஐ.டி. புதுச்சேரி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி வரவேற்றாா்.
நிகழ்வில் 112 மாணவா்கள் பட்டங்களை நேரில் பெற்றனா்.
திருச்சி என்.ஐ.டி. இயக்குநா் ஜி. அகிலா கெளரவ விருந்தினராக கலந்துகொண்டாா். என்.ஐ.டி. பதிவாளா் எஸ். சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.