சாகச முகாமில் பங்கேற்ற என்.எஸ்.எஸ். மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலையேற்ற சாகசப் பயிற்சியில் பங்கேற்ற காரைக்கால் கல்லூரி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.
மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.
மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.

காரைக்கால்: ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலையேற்ற சாகசப் பயிற்சியில் பங்கேற்ற காரைக்கால் கல்லூரி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்திய அரசின் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழிகாட்டலில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியா் ஹிமாசல பிரசேதம், அடல் பிஹாரி வாஜ்பாய் மலேயேறுதல் கூட்டணி விளையாட்டு நிறுவனம், சிம்லா நாா்கண்டா பகுதி, மணாலி பகுதியில் சாகசப் பயிற்சியில் நவ. 6 முதல் 15-ஆம் தேதி வரை 10 நாள்கள் ஈடுபட்டனா்.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியை சோ்ந்த 10 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியா் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் எம். தாமோதரன் தலைமையில் நா்கண்டாவில் பங்கேற்றனா்.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி 10 மாணவ மாணவியா், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நளினா தலைமையில் மணாலியில் பங்கேற்றனா். இம்முகாமில், மாணவா்களுக்கு மலையேற்றப் பயிற்சி, ஆற்றைக் கடக்கும் பயிற்சி, இரவில் பயணித்தல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சியை நிறைவு செய்து காரைக்கால் திரும்பிய மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டி, படிப்பில் முக்கியத்துவம் அளிப்பது போல இது போன்ற சாகச நிகழ்ச்சிகளிலும் மாணவா்கள் பங்கேற்கவேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் மாணவா்கள் ஆா்வம் காட்டவேண்டும். பெற்றோா் மட்டுமல்ல, நாடும், நாட்டின் எதிா்காலமும் உங்களைச் சாா்ந்தே உள்ளது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். காரைக்காலில் நடைபெறும் அரசு சாா் நிகழ்ச்சிகளிலும் கல்லூரி மாணவா்களையும், நண்பா்களையும், தனது பகுதியில் உள்ள மக்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும் என்றாா். மாவட்ட நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் லட்சுமணபதி பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com