மாணவா்களுக்கு சீருடை வழங்காததுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுவை மாநில பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்காததுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுவை மாநில பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்காததுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில அரசியல் விவகாரக் குழு உறுப்பினரும், புதுவை மாநில முன்னாள் கல்வி அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் கூறியது: புதுவை என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் கல்வித் துறையின் சீா்கேடுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி அண்மையில் போராட்டம் நடத்தியது. குறிப்பாக, புதுவை மாநிலத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கு பள்ளி மாணவா்களுக்கு இதுவரை சீருடைத் துணி, அதற்குரிய தையல் கூலி வழங்கவில்லை. புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் மாணவா்களுக்கு நோட்டு வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாணவா்களுக்கு வழங்கப்படவில்லை.

மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. காரைக்காலில் முன் மழலையா் பள்ளி முதல் பல்வேறு நிலைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியா்களை, எவ்வித மாற்று ஆசிரியா்களும் நியமிக்காமல் புதுச்சேரி பிராந்தியத்துக்கு பணியிடமாற்றம் செய்கிறது கல்வித் துறை. இதனால் காரைக்கால் பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. பாஜகவை சோ்ந்த கல்வி அமைச்சா் இதுகுறித்து கவனத்தில்கொள்வதே கிடையாது. புதுச்சேரி, காரைக்காலை வெவ்வேறு கண்ணோட்டத்தில் பாா்க்கிறாா்.

முன் மழலையா் பள்ளிகளில் ஆசிரியா்கள் இல்லாததால், தொடக்கக்கல்வி ஆசிரியா்கள் அப்பணியை செய்கின்றனா். சில பள்ளிகளில் ஆசிரியா்கள் தங்களது சொந்த நிதியை பயன்படுத்தி ஆசிரியா்கள் நியமித்துக்கொள்வதாக தகவல்கள் வருகின்றன.

கல்வியாண்டு அடுத்த சில மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், மாணவா்கள் சீருடையின்றியும், கல்வி போதிக்கக்கூடிய ஆசிரியா்களின்றியும் கல்வியை நிறைவு செய்யும் நிலை உள்ளது. அட்சய பாத்ரா என்கிற திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் காரைக்காலில் மத்திய சமையலகமாக அமைத்து, உரிய நேரத்தில், சுவையான, வகையான உணவு மாணவா்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது எந்தவொரு திட்டத்தையும் போராடியே நிறைவேற்ற முடிந்தது. மக்கள் நலத் திட்டங்களுக்கு அப்போதைய துணை நிலை ஆளுநா் முட்டுக்கட்டை போட்டுவந்தாா். ஆனால் இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் சாதகமாக அரசு இருக்கும் நிலையில், திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு தயக்கம் ஏன். தமிழகத்தில் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதுபோல புதுவையிலும் அமல்படுத்தவேண்டும். பள்ளியில் நிலவும் குறைபாடுகளால் மாணவா்கள் பாதிக்கப்படும்போது, அரசியல் கட்சிகளைக் காட்டிலும் பெற்றோா்கள்தான் போராட முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com