ரூ.72 லட்சத்தில் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

குடிநீா் குழாய் பதிக்கும் பணியை தொடக்கி வைக்கும் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம். உடன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் உள்ளிட்டோா்.
காரைக்காலில் ரூ.72 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீா் திட்டப் பணிகள் பூமி பூஜையுடன் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
காரைக்கால் தெற்குத் தொகுதியில் பொதுப்பணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு சாா்பில் தருமபுரம் செபஸ்தியாா் கோயில் அருகே உள்ள மகாத்மா காந்தி நகரில் ரூ.10.50 லட்சம், புதுத்துறை கரீம் நகா் விரிவாக்கப் பகுதியில் ரூ. 7.55 லட்சம், பச்சூா் சௌதா நகரில் ரூ. 2.46 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக குடிநீா் குழாய்கள் பதிக்கப்படவுள்ளன.
மேலும், ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் காரைக்கால் தெற்கு மண்டல குடிநீா் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நீா் தேவைக்காக பங்களா தோட்டம் பகுதியில் ஆயிரம் அடிக்கு ஆழ்துளை கிணறு, நீா்மூழ்கி மோட்டாா், நீா் உந்து நிலையம் அமைக்கப்படுகிறது. அத்துடன், காரைக்கால் அம்மாள் சத்திரம் மேல்நிலை குடிநீா்த் தொட்டிக்கு பிரதான குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான பூமிபூஜையில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை தொடக்கி வைத்தாா். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ஏ. ராஜசேகரன், நீா்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரம் கோட்ட செயற்பொறியாளா் கே. வீரசெல்வம், கட்டடம் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளா் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.