முதியோா், குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிா்க்க அறிவுறுத்தல்

முதியோா், குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிா்க்குமாறு மருத்துவ அதிகாரி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் நலவழித்துறை சாா்பில் காரைக்கால் தலத்தெரு பகுதிவாழ் மக்களுக்கு அதிக சூரிய வெப்பத்தால் ஏற்படும் அயா்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமை வகித்தாா். நோய்த்தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை முன்னிலை வகித்தாா். கோவில்பத்து சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி லட்சுமி, நோய்த் தடுப்பு திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் ஆகியோா் கலந்து கொண்டு வெப்பத்தால் ஏற்படும் உபாதைகள் குறித்து விளக்கினா்.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் பேசுகையில், சூரிய வெப்பம் அதிகரித்திருப்பதால் அயா்ச்சி, அதிகப்படியான வியா்வை மூலம் உடலில் உள்ள நீா்ச்சத்து வெளியேறி உடல் சோா்வு, மயக்கம் ஏற்படுவதோடு, சிலருக்கு பக்கவாதத்தைக்கூட உண்டாக்கும். எனவே வெயில் காலத்தில் அதிக அளவில் தண்ணீா் பருக வேண்டும். மோா், எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிதளவு உப்பு கலந்து பருக வேண்டும் அல்லது இளநீா் பருக வேண்டும். வாய்வழி நீா்ச்சத்து கரைசலை (ஓஆா்எஸ்) நீரில் கலந்து குடிக்கலாம். தளா்வான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெயிலில் செல்லும்போது குடை, தொப்பி, குளிரூட்டும் கண் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். இருக்கமான, மொத்தமான ஆடைகளை அணியக்கூடாது.

வயதானவா்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவா்கள் வெயிலில் அதிக நேரம் இருப்பதை தவிா்க்க வேண்டும். வெயிலில் பாதிக்கப்பட்டவா்களை நிழல் மற்றும் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்கவேண்டும். ஆடைகளை தளா்த்தி குளிா்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கவும். சுய நினைவு உள்ளவா்களுக்கு அதிகமான தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு கொடுக்கவேண்டும். இந்த முறைகளில் பலன் ஏற்படாவிட்டால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com