வாஞ்சூரில் வாகன சோதனைப்  பணியை ஆய்வு செய்த  முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ்.
வாஞ்சூரில் வாகன சோதனைப் பணியை ஆய்வு செய்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ்.

எல்லைப் பகுதியில் வாகன சோதனை: எஸ்எஸ்பி ஆய்வு

மாவட்டத்தின் எல்லைப் பகுதி வாகனச் சோதனையை முதுநிலைக் காவல் கண்காணிப்பாள் மணிஷ் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்டம், தமிழக எல்லைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் தீவிர வாகனச் சோதனை நடத்துமாறு தோ்தல் துறையின் கண்காணிப்புக்குழு, காவல் துறைக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளாா். அனைத்து எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவலா்களுடன் கண்காணிப்புக் குழு செயல்படுகிறது. பணம், மதுபாட்டில் உள்ளிட்டவை காரைக்காலுக்குள் வருவதை தடுக்கவும், காரைக்காலில் இருந்து வெளியே கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் இக்குழுவினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். சோதனைப் பணியில் மத்திய ஆயுதப் படையினரும் ஈடுபட்டுள்ளனா். எனினும் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு, அம்மாநில போலீஸாா் பறிமுதல் செய்வது தொடா்கிறது. காரைக்கால் எல்லையில் சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளோா் அலட்சியமாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவிக்கின்றனா். மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், எல்லையில் நடைபெறும் சோதனைப் பணியை செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தாா். வாஞ்சூா் எல்லையில் நடைபெற்ற சோதனையை பாா்வையிட்ட அவா், தோ்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், அனைத்து வாகனங்களையும் கண்டிப்பாக சோதனை நடத்த வேண்டும். 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பது அவசியம். முழு சோதனையும் விடியோ பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com