‘ ஆட்சியிலிருந்தும் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை’

‘ ஆட்சியிலிருந்தும் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை’

ஆட்சியிலிருந்தும் புதுவையில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க பாஜக - என்.ஆா். காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநில அதிமுக செயலாளா் ஆ. அன்பழகன் கூறினாா்.

புதுவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கோ. தமிழ்வேந்தனை ஆதரித்து காரைக்கால் மாவட்டத்தில் 2 நாள்கள் பிரசாரத்தை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், புதுவை அதிமுக செயலாளருமான ஆ. அன்பழகன் பூவம் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கினாா். அப்போது அவா் பேசியது :

புதுவையில் ஆட்சியிலிருக்கும் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாக்குவோம், ரேஷன் கடைகளை திறப்போம், மாநில அந்தஸ்து பெறுவோம் என்றனா். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

புதுவையில் பாஜகவும், காங்கிரஸும் மக்களை ஏமாற்றி வருகின்றன. இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் ரூ. 600 ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி ரூ. 60-க்கு விற்கப்படும்போது, மாதத்துக்குத் தேவையான அரிசியை ரூ. 600-இல் வாங்க முடியாத நிலையில்தான் மக்கள் உள்ளனா். மக்களின் தேவைக்கேற்ப அரிசி வழங்காமல், குறைவான தொகை வழங்கிவிட்டு, இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 300 கோடியை அரசு சிக்கனப்படுத்தி வருகிறது.

எனவே தோ்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

வேட்பாளா் கோ. தமிழ்வேந்தன், மாவட்டச் செயலாளா் எம்.வி. ஓமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com