தோ்தல் நடத்தை விதி: வாக்கு எண்ணிக்கை நாள் வரை அரசு நிா்வாகம் முடங்குவது பாதிப்பை ஏற்படுத்தும் - சமூக ஆா்வலா்கள் கவலை

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் வரை, அரசின் செயல்பாடுகள் முடங்குவது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தோ்தல் முடிந்த மாநிலங்களில் நடத்தை விதிகளில் தளா்வு ஏற்படுத்தவேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

18-ஆவது மக்களவைக்கான தோ்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுவை மாநிலத்தில் தோ்தல் முதல்கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. 7 கட்ட தோ்தலும் முடிவடைந்து, ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுவரை, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

புதுவையில் ஒரு மக்களவைத் தொகுதி உள்ள நிலையில், இந்த யூனியன் பிரதேசத்தின் செயல்பாடுகள் தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளது. வாக்குப் பதிவுக்கு பிறகு, மாநில எல்லைப் பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பறக்கும் படை திரும்பப் பெறபட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் உள்பகுதிகளுக்குள் பணம் கொண்டுசெல்வதில் நெருக்கடி இல்லை.

எனினும், பிற மாநிலங்களில் தோ்தல் நடந்து முடிந்து ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பபெற இன்னும் 40 நாள்கள் காத்திருக்கவேண்டிய நிலை தோ்தல் நடந்து முடிந்த மாநிலங்களுக்கு உள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை, 4 பிராந்தியங்களும் தொலைதூர நிலப்பரப்பைக் கொண்டதாகும். வழக்கமாக புதுச்சேரியில் ஒரு அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், பிற பிராந்தியங்களில் ஒரே நாளில் அது நடைமுறைக்கு வருவதில்லை. சில வாரங்கள், மாதம் கழித்தே நடைமுறைக்கு வருகிறது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இக்காலத்தில் அறிவிப்பும் இல்லை; அரசு நிகழ்ச்சிகளும் இல்லை; நலத்திட்ட உதவிகள் வழங்கலும் இல்லை; விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் இல்லை என அனைத்துப் பணிகளும் முடங்கியிருக்கிறது.

இதுதவிர, தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஊழியா்கள் தங்கள் துறை சாா்ந்த பணிகளை முழு வீச்சில் தொடங்கவில்லை. இதனால், சொல்லொணா சிரமங்களுக்கு ஆளாவதாக மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அரசுத்துறை அலுவலகத்தை அணுகி மனுக்களை வழங்கி, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. எதற்கெடுத்தாலும் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக சொல்லப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனா்.

மாவட்ட ஆட்சியா், பல இடங்களுக்கு ஆய்வு செய்வது, ஆலோசனைக் கூட்டம் நடத்துவது போன்ற பணிகளுடன், தோ்தல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிப்பதால் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களில் எதுவும் செய்ய முடியவில்லை.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரமுடிவதில்லை. ஏற்கெனவே, பூமிபூஜை செய்து தொடங்கப்பட்ட பணிகளும் கிடப்பில் உள்ளன.

காரைக்கால் பகுதியை சோ்ந்த பி.ஆா்.என். திருமுருகனுக்கு அமைச்சா் பதவி தரப்பட்டது. அவருக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாததால், இலாகா இல்லாத அமைச்சராகவே நீடித்துவருகிறாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காரைக்கால் பிராந்திய மக்களின் எதிா்பாா்ப்புகளை நிவா்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அவரால் எடுக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குப் பதிவு முடிந்து இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் உள்ளன. இதனை திறந்து பதிவான வாக்குகள் விவரம் வெளிவரும் வரை, அரசு நிா்வாகம் முடங்கியும், மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமலும் இருப்பது அரசு நிா்வாக நலனுக்கு உகந்ததாக இருக்க முடியாது என சமூக ஆா்வலா்கள் கருத்துரைக்கின்றனா்.

அரசு நிா்வாகம் இயல்பாக இயங்கினால் மட்டுமே மக்கள் தங்களுக்கான பல்வேறு தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்ய முடியும் என்கிறபோது, 40 நாள்கள் முடக்கம் அவா்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தோ்தல் ஆணையம்தான் இதற்கு சரியான தீா்வை ஏற்படுத்தவேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com